மனமிருந்தால் மார்க்கமுண்டு!
சீமைக்கருவேலன் மரங்களை அகற்றினால் திருமூர்த்தியில் கூடுதல் நீர் சேமிக்கலாம்
உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் நீர் தேங்கும் பரப்பில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சீமைக்கருவேலன் மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றை அகற்றி, துார்வாரினால், கூடுதல் நீர் சேமிக்கலாம் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றான, உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை வாயிலாக, கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த அணை, 60 உயரமும், 1,935.25 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். அணையில், 2.6 சதுர கி.மீ., சுற்றளவில், 645 ஏக்கர் பரப்பளவில் நீர் தேங்கி வருகிறது. அணையில், நீர் தேங்கும் பகுதியில், வண்டல் மண் தேங்கியுள்ளதால், நீர் கொள்ளளவு பெருமளவு குறைந்துள்ளது.
அணையில், கூடுதல் நீர் சேமிக்கவும், விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம், கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், இரு சர்வே எண்களில், 4 லட்சத்து, 41 ஆயிரத்து, 951 கன மீட்டர் மண் எடுக்க ஏற்கனவே அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், 2 லட்சத்து, 89 ஆயிரத்து, 682 கன மீட்டர் மண் எடுக்கப்பட்டுள்ளது. மீதம், ஒரு லட்சத்து, 52 ஆயிரத்து, 269 கன மீட்டர் வண்டல் மண் எடுக்கலாம்.
நடப்பாண்டு, அணையிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதித்திருந்தாலும், அணையில் கூடுதல் நீர் தேங்கியுள்ளதால் சிக்கல் நிலவுகிறது.
ஆக்கிரமிப்பு திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில், ஏறத்தாழ, 100 ஏக்கர் பரப்பளவில், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சீமைக்கருவேலன் மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இம்மரங்களால், நிலத்தடி நீர்மட்டம், காற்று மாசு என சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசும், உயர் நீதிமன்றமும், நீர் நிலைகள், பொது இடங்களிலுள்ள சீமைக்கருவேலன் மரங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அணையில் கிழக்கு பகுதியில் உள்ள சீமைக்கருவேலன் மரங்களை அகற்றுவது குறித்து, நீர் வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அடர்ந்த வனப்பகுதியாக மாறியுள்ளதோடு, பெரிய அளவில் வளர்ந்துள்ள மரங்களிலிருந்து விழும் விதைதள், பாசன நீர் வழியாக, இரு மாவட்டத்திலுள்ள பாசன நிலங்களுக்கும் பரவி வருகிறது. மேலும், அடர்ந்த வனப்பகுதியில், அணை நீர் தேங்கும் பகுதி அமைந்துள்ளதால், வன விலங்குகளுக்கும், வனச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், சீமைக்கருவேலன் மரங்கள் உள்ள காடு பகுதி, மண் மேடாக உள்ளதால், நீர் தேங்க முடியாத நிலை உள்ளது. அதனால், சீமைக்கருவேலன் மரங்களை அகற்றவிட்டு, அப்பகுதியை துார்வாரினால், மழை காலங்களில் அணையில் கூடுதல் நீரை சேமித்து, பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
விவசாயிகள் கூறியதாவது:
திருமூர்த்தி அணையில், அதிகளவு வண்டல் மண் தேங்கி, நீர் கொள்ளளவு பெருமளவு குறைந்துள்ளது. இதனால், பாசன நிலங்களுக்கு, நீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுவதோடு, பயிர்களும் காய்ந்து வருகின்றன.
அணையை முழுமையாக துார்வாரி, அணைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முழுமையாக பயன்படுத்தினால், கூடுதலாக ஒரு டி.எம்.சி.,வரை நீர் சேமிக்க முடியும்.
இதில், அணையில் கிழக்கு பகுதியில் நீர் தேங்க முடியாத அளவிற்கு மேட்டுப்பகுதியாகவும், சீமைக்கருவேலன் மரங்கள் ஆக்கிரமித்தும் உள்ளது. இம்மரங்களால், அணை நீரும், வனப்பகுதியும் பாதிப்படைகிறது. எனவே, சீமைக்கருவேலன் மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில், இப்பகுதிக்கு அனுமதியளித்தால் பயனுள்ளதாக அமைவதோடு, கூடுதல் நீர் சேமிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
செங்கை புறநகர் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் அமைச்சர் ராஜ்குமார்
-
வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பாண்டூரில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
ரூ.300 கோடியில் கடம்பூர் தாவரவியல் பூங்கா திட்டம்... கிடப்பில்! : அரசு ஒதுக்கிய 138 ஏக்கர் நிலங்களை என்ன செய்வது?
-
மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது
-
டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி
-
லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம் அமலாக்கத்துறை விசாரணை