விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் ஆபத்து: கப்பம் கிடைப்பதால் அதிகாரிகள் கமுக்கம்

3


நமது சிறப்பு நிருபர்




உத்திரமேரூரில் விதிகளை மீறி இயங்கும் தனியார் கல்குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகளால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் திண்டாடி வருகின்றனர். விதிமீறல்களை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால், நிலைமை மோசமாகி வருவதாகவும், த.வெ.க., அரசு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் ஒன்றியம், ஏரிகள், விவசாய கிணறுகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த விவசாய செழிப்பு மிக்க பகுதியாக விளங்குகிறது. இவ்வாறு சிறப்பான விவசாய வளம் கொண்ட பகுதி, கல்குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலை களால், 20 ஆண்டுகளாக சீரழிந்து வருகிறது. உத்திரமேரூரில் மதுார், சிறுதாமூர், சித்தாலப்பாக்கம், சிறுமையிலுார், பட்டா, அருங்குன்றம், ஆலஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில், 26 தனியார் கல்குவாரிகள் இயங்குகின்றன.

மேலும், 50க்கும் மேற்பட்ட தனியார் கல் அரவை தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் வெடி வைத்து பாறை கற்கள் உடைத்து, அதை சுற்றுவட்டாரத்தில் இயங்கும் கல் அரவை தொழிற்சாலைகளில் அரைத்து, ஜல்லி மற்றும் செயற்கை மணலான எம்.சாண்ட் தயாரிக்கப்படுகிறது.
அவை, சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சி புரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிக்கு அனுப்பி, தனியார் நிறுவனங்கள் வருவாய் ஈட்டி வருகின்றன.

இந்த கல்குவாரிகள், கல் அரவை ஆலைகள் விதிமுறைகள் பற்றி கவலைப்படாமல், இஷ்டம்போல் செயல்படுவதால், இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். விதிமீறல்களை தடுக்க வேண்டிய அதிகாரிகளும், உடந்தையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் கூறியதாவது: குவாரிகளால் நீர்நிலைகள் சீரழிவு, ஏரி வரத்து கால்வாய், நிலத்திற்கான பாசன கால்வாய், புறம்போக்கு நிலங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பு என, அட்டூழியங்கள் நடந்து வருகின்றன.

இவை அனைத்தையும் அறிந்துள்ள அரசு துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் வீதிமீறலுக்கு துணை போகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியத்தில் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளங்களை பாதுகாக்க, கல்குவாரிகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படுவதை, விஜய் தலைமையிலான அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டம் முழுதும் கல்குவாரி செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விதிமீறல், காற்று மாசு குறித்த புகார்கள் வருகின்றன. கனிமவளத்துறை, வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால், அனுமதி ரத்து மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. சட்ட விரோத தொழிற்சாலைகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


விதிமீறல்கள் என்ன?




* கல் குவாரிகளில் மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை மட்டுமே பாறைகளை உடைக்க வெடி வைக்க வேண்டும். குவாரிகள் இந்த கால நேரத்தை பின்பற்றாமல், இஷ்டம்போல் வெடி வைக்கின்றன. அதிக சக்தியுடன் வெடிக்க வைப்பதால், கால்நடை பராமரிப்போர், குவாரியை ஒட்டி விவசாயம் செய்வோர் அச்சப்படுகின்றனர்

* அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், அதிக ஆழம் தோண்டி கற்கள் எடுப்பதால் அருகாமையில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, பாசன வசதியின்றி சாகுபடி பாதிக்கப்படுகிறது

* கல் அரவை தொழிற்சாலைகள், காலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி உண்டு. பெரும்பாலான கிரஷர்கள் இரவு முழுதும் செயல்படுகின்றன.

* அரவை நேரத்தில் புழுதி பறக்காமல் இருக்க, அரவை இயந்திரத்தில் தண்ணீர் தெளிப்பது அவசியம். ஆனால், இயந்திரம் பழுதாவதை தவிர்க்க, தண்ணீர் ஊற்றாமல் விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

* சாலை, குடியிருப்புகளை ஒட்டி கிரஷர்கள் உள்ளதால், புழுதி மற்றும் புகை பரவி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, சுவாச கோளாறால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

* குத்தகை காலம் முடிந்த கல்குவாரிகளில் முறையாக தடுப்பு வேலிகள் அமைக்காததால், கால்நடைகள் மற்றும் மனிதர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

* அதிவேகம், தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால், ஜல்லிக் கற்கள் சிதறல் மற்றும் சாலையொட்டி உள்ள விவசாய பயிர்கள் மீது புழுதி பரவுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் தொடர்கின்றன.

Advertisement