ஆர்வமில்லை! அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்க மக்களிடம்... அரசு நிர்ணயித்த பங்களிப்பு தொகை அதிகம் என தயக்கம்
திருத்தணி, ஜூன் 26-
அரசு நிர்ணயித்துள்ள பங்களிப்பு தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி, திருத்தணி தாலுகாவின் மூன்று இடங்களில், 476 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்க, பயனாளிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், திருத்தணி தாலுகாவில், மூன்று இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசு தீர்மானித்தது.
அதன்படி, முருக்கம்பட்டு பகுதியில் 135.22 கோடி ரூபாயில், 1,040 வீடுகள், தாழவேடு பகுதியில் 67.34 கோடி ரூபாயில், 520 வீடுகள், அருங்குளம் பகுதியில் 276.77 கோடி ரூபாயில், 2,112 வீடுகள் என, 476 கோடி ரூபாயில், மொத்தம் 3,672 வீடுகள் கட்டுவதற்கு, கடந்த 2020ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
பின், 2021ம் ஆண்டு, மூன்று இடங்களிலும் ‘டெண்டர்’ விடப்பட்டு, கட்டட பணிகள் தொடங்கியது. தற்போது, முருக்கம்பட்டு மற்றும் தாழவேடு ஆகிய பகுதிகளில், தரைத்தளம் மற்றும் 4 அடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அருங்குளம் பகுதியில், தரைத்தளம் மற்றும் ஐந்து அடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகள், திருவள்ளூர் மாவட்டத்தில், ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. வீடுகள் ஒதுக்கீடு கோரும் நபரின் ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் வழங்கப்படும் வீட்டின் மதிப்பு, 13 லட்சம் ரூபாய். இதில், மத்திய அரசு 1.50 லட்சம் ரூபாய், மாநில அரசு 7 லட்சம் ரூபாய் என, மொத்தம் 8.50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
மீதமுள்ள தொகையான 4.50 லட்சம் ரூபாயை பயனாளிகள் செலுத்தி, வீடுகள் பெறலாம். இத்திட்டத்தில் வீடுகள் தேவைப்படும் பயனாளிகள் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றை இணைத்து, மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்க வேண்டும்.
இந்த மனுக்கள், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடுகள் ஓதுக்கீடு செய்து தரப்படும்.
கடந்த 6 மாதங்களுக்கு முன், மூன்று இடங்களிலும் கட்டடப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
ஆனால், இதுவரை, 841 பேர் மட்டுமே, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
பயனாளிகள் பங்களிப்பு தொகை அதிகம்; அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை உள்ளிட்ட காரணங்களால், வீடுகள் வாங்க முன்பதிவு செய்வதில், பயனாளிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், முருக்கம்பட்டு, தாழவேடு, அருங்குளம் ஆகிய பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் நவீன வசதிகளுடன், 410 சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ளன.
முருக்கம்பட்டு மற்றும் தாழவேடு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, ‘லிப்ட்’ வசதியில்லை. அருங்குளம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும், ‘லிப்ட்’ வசதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@ பாதுகாப்பு குறைபாடு அடுக்குமாடி குடியிருப்புகள், கிராமத்தில் இருந்து ஒன்றைரை கி.மீ., தொலைவில் அமைந்துள்ளன. மேலும், சாலை வசதி, ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்தப்படவில்லை. முக்கியமாக, மேற்கண்ட மூன்று இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. இதுதவிர, ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும் அமைந்துள்ளதால், அங்கு போதிய பாதுகாப்பு இருக்காது. மேலும், பயனாளிகள் பங்களிப்பு தொகை அதிகம் என்பதாலும், பலர் வீடுகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனவே, பங்களிப்புத் தொகையை குறைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.block_B
மேலும்
-
ஏரி நீரில் மூழ்கிய சாலையில் புதர் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
-
மானிய விலையில் நிலக்கடலை விதை: வேளாண் துறை தகவல்
-
கூட்டுறவு சங்க பொருட்கள் மொத்த விற்பனையை அதிகரிக்க யோசனை
-
மது வாங்க சென்ற இடத்தில் தகராறு 2 பேரின் கழுத்தை அறுத்தவருக்கு வலை
-
. பிரித்து போடாத குப்பையால் துாய்மை பணியாளர்கள் அவதி
-
ஆடு திருடிய 2 பேர் கைது