பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லை வரையறையில் குழப்பம் கட்டுமான நிறுவனம் புகார்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின், ‘ராம்சார்’ தள எல்லையில் வரும், சர்வே எண்கள் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் வெளிப்படையாக அறிவிக்காததால், கட்டுமான திட்டங்களுக்கு பிரச்னை ஏற்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில், 1965ம் ஆண்டு வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மொத்த பரப்பளவு, 19,768 ஏக்கர் என்று கூறப்படுகிறது.

சென்னையில் மழைக்காலத்தில் வெள்ள நீரை உள்வாங்கி, கடலுக்கு அனுப்புவது மட்டுமல்லாது, கடலில் உயர் அலை காலத்தில், வெளியேறும் உவர் நீரை உள்வாங்கி திருப்பி அனுப்புவதும், இதன் பணியாக உள்ளது.

இந்நிலையில், 2007ம் ஆண்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, வனத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில், வருவாய், மாநகராட்சி என, பல்வேறு துறைகளிடம் இருந்து, நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.

அக்கம்பக்கத்தில் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சியால், சதுப்புநிலம் நாளுக்குநாள் சுருங்கி வருவதுடன், அதில் குப்பை கொட்டுவது, கழிவுநீர் விடும் போக்கு அதிகரித்துள்ளது. வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை, தற்போது, 3,083 ஏக்கராக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவி உள்ளது.

இந்நிலையில், வனத்துறை முயற்சியால், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2022ல் ‘ராம்சார்’ தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, பளளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டி, அதன் தாக்க பகுதி எல்லையை, வரையறை செய்ய வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. ஆனால், இதற்கான பணிகளை விரைந்து முடிப்பதில், வனத்துறை ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று, சாலை அமைப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், சதுப்பு நிலம் மற்றும் ராம்சார் தள எல்லை குறித்து கேள்வி எழுப்பியது.

இதற்கு அரசு தரப்பில் அளித்த பதில்கள், திருப்தி அளிக்காத நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின், ராம்சார் தள தற்காலிக எல்லையாக, 1 கி.மீ., சுற்றளவை, 2025 செப்., 24ல் அறிவித்தது. இப்பகுதியில் புதிய கட்டட அனுமதி வழங்கவும், பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.

இதற்கிடையில், மேடவாக்கம் – பெரும்பாக்கம் சாலையில், பிரிகேட் குழுமம், 14.7 ஏக்கரில், 1,250 வீடுகள் அடங்கிய குடியிருப்பு கட்ட, சுற்றுச்சூழல் அனுமதி, சி.எம்.டி.ஏ., கட்டட அனுமதி ஆகியவற்றை, 2025 ஜன., மாதம் பெற்றது.

இத்திட்டம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வருவதாக, 2025 அக்., மாதம் புகார் எழுந்தது. இதையடுத்து, 2025 செப்., மாதம் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின், 1 கி.மீ., சுற்றளவுக்கு கட்டுமான திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., தடை விதித்தது.

அதன் அடிப்படையில், பிரிகேட் திட்டத்தில் பணிகளை தொடர சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது; விசாரணையின் முடிவில் தடையை உயர் நீதிமன்றம் நீக்கியது.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக பிரிகேட் குழுமம் தெரிவித்துள்ளது.

சர்வே எண் விபரம் எங்கே?

இதுகுறித்து, பிரிகேட் கட்டுமான நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது:

* பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2022ல் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான எல்லை வரையறை பணிகளை, வனத்துறை மேற்கொள்ளாமல் இருந்தது ஏன்?

* பள்ளிக்கரணை சதுப்புநிலம், ராம்சார் எல்லைக்குள் வர வாய்ப்புள்ள சர்வே எண்கள் குறித்த விபரங்களை அதிகாரிகள் வெளியிட்டு இருந்தால், புதிய திட்டங்களை செயல்படுத்துவோர் விழிப்புடன் இருந்திருப்பர்

* எங்கள் திட்டத்துக்கான நிலம், பள்ளிக்கரணை சர்வே எண்ணில் வரவில்லை; சதுப்பு நிலத்தில் இருந்து, 65 மீட்டர் தொலைவில் இருப்பதாக கூறி தடையின்மை சான்று வழங்கப்பட்டது

* இதன் அடிப்படையிலேயே வருவாய் துறை, வனத்துறை, நீர்வளத்துறை என பல்வேறு துறைகள் ஆய்வு செய்து, தடையின்மை சான்று கொடுத்தன

* அனைத்து உத்தரவுகள், ஆவணங்களையும் வைத்துள்ள அரசு துறைகள், கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோருக்கு, தடை செய்யப்பட்ட நிலங்கள் விபரங்களை தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

* தடை செய்யப்படாத நிலத்தில் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பான புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிலை கேட்காமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க கூடாது

 * சர்வே எண் வாரியாக நிலத்தின் தன்மையை ஆராயாமல், 1 கி.மீ., சுற்றளவுக்கு தடை விதிப்பதால் நகரின் பிரதான பகுதியில் மக்கள் வீடு வாங்கவும், நிலத்தை மேம்படுத்த முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீர்வு என்ன?

இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:

கடலோர மண்டல ஒழுங்குமுறை விதியில், 500 மீட்டர் அளவுக்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கரணையை சுற்றி, 1 கி.மீ., அளவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்னை ஏற்பட்டபோது, ஒடிசாவில், நீர் நிலையில் இருந்து, 70 மீட்டர் அளவுக்கு வெளிச்சுற்று எல்லை வரையறுக்கப்பட்டது. இதை பின்பற்றி, தமிழக அரசு பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் எல்லையை, குறைந்தபட்ச அளவில் நிர்ணயித்து, அதை முறையாக அமல்படுத்த வேண்டும்.

இதுகுறித்த விரிவான வரைவு அறிக்கைகள் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

***

Advertisement