மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

மூணாறு:மூணாறில் தென்மேற்கு பருவ மழை வெகுவாக குறைந்ததால், குடிநீர், மின்சார பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். அப்போது மாநிலத்தில் பிற பகுதிகளை விட மூணாறில் அதிகமாக மழை பெய்வது வழக்கம். இந்த கால அளவில் சராசரி 300 செ.மீ., முதல் 400 செ.மீ., மழை பதிவாகும். இந்தாண்டு கோடை மழை சரிவர பெய்யாத நிலையில், பருவ மழை ஜூன் 4ல் துவங்கிய நிலையில் மழை பொய்த்தது.

2025ல் ஜன.1 முதல் ஜூன் 27 வரை 259.22 செ.மீ., மழை பதிவானது. இதே கால அளவில் இந்தாண்டு 72.07 செ.மீ., மழை பெய்தது. இது கடந்தாண்டை விட 187.15 செ.மீ., குறைவாகும். 2025 மே மாதம் 115.9, ஜூன் 1 முதல் 27 வரை 128.12 செ.மீ., மழை பதிவானது. இந்தாண்டு மே மாதம் 14.12, ஜூன் 1 முதல் 27 வரை 40.85 செ.மீ., மழை பெய்தது.

இதற்கு முன்பு கடந்த பத்து ஆண்டுகளை கணக்கிடும்போது ஜூன் மாதங்களில் மிகவும் குறைவாக 2022 ஜூனில் 20.25, 2023 ஜூனில் 13.9 செ.மீ., மழை பதிவானது. அதே சமயம் ஜூலை, ஆகஸ்டில் மழை அதிகரித்தது. அதுபோன்று இந்தாண்டும் ஜூலை, ஆகஸ்டில் மழை பெய்ய தவறினால் குடிநீர், மின்சாரம் ஆகியவை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

மாறுபட்டகால நிலை:

தற்போது பருவ மழை படிப்படியாக வலுவடையும் கால கட்டம் என்றபோதும், மழை வெகுவாக குறைந்து மதியத்திற்கு பிறகு மட்டும் சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. காலையில் மேகங்கள் சூழ்ந்தும், அதன் பிறகு சிறிய வெயில், பின்னர் சிறிய அளவில் மழை என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. அதனை அனுபவிக்கும் வகையில் ஜூனில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது.

Advertisement