யானை தந்தங்கள் மீட்பா தகவல் தெரிவிக்காத வனத்துறை

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பண்ணைக்காடு வனப்பகுதிக்குள் இறந்து கிடந்த யானை தந்தங்களை வனத்துறை மீட்கப்பட்ட நிலையில் இது குறித்த தகவலை வெளியிடாமல் உள்ளனர்.

ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பக பகுதியான பண்ணைக்காடு பகுதியில் எலும்பு கூடான நிலையில் யானையின் உடல் இரு நாட்களுக்கு முன் மீட்கப்பட்டது. யானையின் இரு தந்தங்களும் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து கண்டமனுார் வனச்சரக அதிகாரிகள் ராயவேலுார் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். இதனிடையே யானை இறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வனத்துறையினர் கவனத்திற்கு ஏன் வரவில்லை. வனப்பகுதிக்குள் முறையான ரோந்து பணிகள் ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்தனர்.

இதை தொடர்ந்து திருடு போன தந்தங்களை கண்டுபிடிக்க வனத்துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இரு தந்தங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த எந்த தகவலையும் வனத்துறையினர் தெரிவிக்கவில்லை.

Advertisement