வாலாஜாபாதில் இடமின்மை, மக்கள் எதிர்ப்பால் நவீன எரிவாயு தகன மேடை திட்டம் கைவிடல்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இறந்தவர்களின் சடலங்களை பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளேரியம்மன் கோவில், சேர்க்காடு மற்றும் கீழாண்டை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மயானங்களில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த மயானங்கள் பாலாறு உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளையொட்டி உள்ளதால், அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் வெள்ளப்பெருக்கு சமயங்களில் நீரில் அடித்து செல்லுதல் போன்ற அவலம் இருந்து வருகிறது.
இதனால், தண்ணீர் மாசு அடைவதோடு பாலாற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இந்த 3 மயானங்களிலும் தற்போது போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடி நிலை உள்ளது.
எனவே, வாலாஜாபாத் பேரூராட்சியில் நவீன எரிவாயு தகனமேடை மின் மயானம் வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.
அக்கோரிக்கையை ஏற்று, வாலாஜாபாத்தில் புதிதாக நவீன எரிவாயு தகனமேடை அமைக்க 2025 - 26ம் ஆண்டு, 1.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக, வாலாஜாபாத் பேரூராட்சி 5வது வார்டு வல்லப்பாக்கம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் விடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, வல்லப்பாக்கத்தில் மின் மயானம் அமைக்க தேர்வு செய்துள்ள இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதாகவும், இதனால் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காற்று மாசு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என, அப்பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக வாலாஜாபாத் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாக அலுவலர் ஒருவர் கூறியதாவது:
வாலாஜாபாதில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க குறிப்பிட்ட சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடங்கள் தேர்வு செய்தும், அங்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், வாலாஜாபாத் பேரூராட்சியில், மின் மயானம் அமைத்தலுக்கான திட்ட செயல்பாடு தற்போது கைவிடப் பட்டுள்ளது,
மின் மயானம் திட்டம் தொடக்கத்திற்கான செயல்பாட்டு காலம் முடிந்து விட்டதால், திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் பேரூராட்சியில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்
-
வீணாக இருக்க அல்ல வாழ்வு 'காதல் காடு' வீணாவின் வெற்றிப்பயணம்
-
சேவைக்கு 'உயிர் கொடுத்த' முத்து சுகுணா
-
லண்டனில் இந்திய மாணவர் உயிரிழப்பு; உடலை மீட்க உதவி கோரும் பெற்றோர்
-
இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்; திரையுலகினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி
-
சேவை ஒதுக்கீட்டில் படித்து பணிக்கு வராத 680 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை