13 ஆண்டாகியும் இலக்கை எட்டாத காஞ்சி பட்டு பூங்கா திணறல்! முதலீடு செய்ய தயங்கும் பட்டு சேலை உற்பத்தியாளர்கள்
காஞ்சிபுரம்: மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின்கீழ், காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட பட்டு பூங்கா, 13 ஆண்டுகளை கடந்தும், 18,000 பேருக்கு வேலை தருவது என்ற இலக்கை எட்ட முடியாமல் திணறி வருகிறது. நெசவாளர்கள் பற்றாக்குறையால் உட்கட்டமைப்புகளை அதிகரிக்கவில்லை. முதலீடு செய்ய பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தயங்குகின்றனர். பட்டு சேலை உற்பத்தி அதிகம் நடைபெறும் காஞ்சிபுரத்தில், 2012ல் பட்டு பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் நிலத்தை பட்டு பூங்காவிற்காக ஒதுக்கி அரசாணை பிறப்பித்தார்.
அப்போது, நிலத்தின் மதிப்பு ரூ.14 கோடியாக இருந்தது. மொத்த திட்ட மதிப்பீடு 83 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, அதில் 7.5 கோடி ரூபாயை மாநில அரசின் மானியமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
தயக்கம் இந்த பட்டு பூங்காவில், காஞ்சிபுரம் பட்டுச் சேலை உற்பத்தி, வடிவமைப்பு, சாயமேற்றுதல், ஆராய்ச்சி, ஆய்வகம், ஸ்டூடியோ, ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஒரே வளாகத்தில் 64 ஷெட்டுகள் அமைத்து, ஒருங்கிணைத்து, உலகத் தரத்தில் ஜவுளி உற்பத்தி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டது.
ஆனால், இதுவரை தனியார் முதலீட்டாளர்கள் மூலம் 13 ஷெட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், 690 கைத்தறிகள் அமைக்கப்பட்டு, பட்டுச் சேலை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
திட்டமிட்டபடி 2,200க்கும் மேற்பட்ட கைத்தறிகள் இயங்க வேண்டிய நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்குக்கூட எட்டப்படவில்லை.
பட்டு பூங்காவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது திறமையான நெசவாளர்கள்.
காஞ்சிபுரம் நகரில், தங்களது வீடுகளிலேயே பல ஆயிரம் பேர் நெசவு பணி செய்தாலும், பட்டு பூங்காவிற்கு வந்து நெசவு பணியை மேற்கொள்ள, பலரும் விரும்பவில்லை. பலரும் தங்களது வசதிக்கு ஏற்ப, வீட்டிலேயே பணியாற்ற விரும்புகின்றனர்.
போதுமான நெசவாளர்கள் கிடைக்காததால், புதிய முதலீட்டாளர்கள் தொழிற்கூடங்கள் அமைக்க தயக்கம் காட்டுகின்றனர்.
முழு அளவில் பட்டு பூங்கா செயல்பட்டால், 18,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும். ஆனால் தற்போதைய நிலை அந்த இலக்கை வெகுதுாரத்தில் நிறுத்தியுள்ளது.
பூங்காவின் முக்கிய பணியாக, 15 கோடி ரூபாய் செலவில் நவீன சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் 4.5 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து, 'பூஜ்ய திரவ வெளியேற்றம்' முறையில் மீண்டும் தொழில்துறைக்கே பயன்படுத்தும் வசதியுடன் இந்த ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி மையம்
பட்டு பூங்காவிற்குத் தேவையான நிலம், உட்கட்டமைப்பு, சுத்திகரிப்பு வசதி உள்ளிட்ட பல அடிப்படை அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நெசவாளர்கள் பற்றாக்குறை மட்டுமே திட்டத்தின் முழுமையான வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறியுள்ளது.
பட்டு பூங்காவில் கோ- - ஆப்டெக்ஸ் சார்பில் 100 கைத்தறிகளுடன் புதிய உற்பத்தி ஷெட் அமைக்க திட்டமிடப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
ஆனால், நெசவாளர்கள் பற்றாக்குறை காரணமாக அந்த திட்டமும் இதுவரை செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது.
நெசவாளர் பயிற்சி, ஊக்கத்தொகை, தொழிலாளர் நலத் திட்டங்கள், குடியிருப்பு மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அரசு விரைவாக செயல்படுத்தினால் மட்டுமே, காஞ்சிபுரம் பட்டு பூங்கா அதன் முழு இலக்கை எட்டி, உலகத் தரத்திலான ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுக்கும் என தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, பட்டு பூங்காவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டு பூங்காவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல, மருத்துவமனை, பயிற்சி மையம், சாலை, வருங்கால வைப்பு நிதி என அனைத்து வசதிகளும் தேவைப்படுகிறது.
அதுகுறித்து நாங்கள் அரசிடம் கேட்கிறோம். இங்கு உற்பத்தியாகும் பட்டு சேலையை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்.
அதற்காக, இளைஞர்களை பயிற்சி கொடுத்து, இங்கு பணியமர்த்த விரும்புகிறோம். அதற்காக, டிப்ளமா கல்லுாரி போன்ற விரிவான வசதியுடன் கூடிய பயிற்சி மையத்தை அமைக்க கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
@quote@ காஞ்சிபுரத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் பட்டு பூங்கா உள்ளது. நீண்ட துாரம் பயணித்து பட்டு பூங்காவிற்கு சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. பட்டு பூங்காவில் நவீன தொழில்நுட்பத்தில் நெசவுமுறை கொண்டு வந்துள்ளனர். எங்களை போன்றவர்களுக்கு இது தெரியாது. இதுபோன்ற காரணங்களால் எங்கள் வீட்டிலேயே நெசவு செய்து கொள்ள விரும்புகிறோம். - கே.ராமகிருஷ்ணன், நெசவாளர், காஞ்சிபுரம்.quote
மேலும்
-
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்
-
வீணாக இருக்க அல்ல வாழ்வு 'காதல் காடு' வீணாவின் வெற்றிப்பயணம்
-
சேவைக்கு 'உயிர் கொடுத்த' முத்து சுகுணா
-
லண்டனில் இந்திய மாணவர் உயிரிழப்பு; உடலை மீட்க உதவி கோரும் பெற்றோர்
-
இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்; திரையுலகினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி
-
சேவை ஒதுக்கீட்டில் படித்து பணிக்கு வராத 680 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை