மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்

1

காசர்கோடு: கேரளாவில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த முன்னாள் ஆர்எஸ்எஸ் நிர்வாகியின் உடலுக்கு முஸ்லிம் பெண் ஒருவர் இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.

காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள சிக்ருபாதாவு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நாராயணன், 64, என்பவர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஜூன் 25ம் தேதி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னாள் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டாளரான நாராயணனை, அவரது குடும்பத்தினர் கைவிட்டுவிட்டனர்.இதையடுத்து, காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான இர்பானா இக்பால், நாராயணனின் இறுதிச்சடங்கு பணிகளை முன்னின்று நடத்தியுள்ளார்.

பர்தா அணிந்திருந்த பஞ்சாயத்து உறுப்பினர் இர்பானா இக்பால், ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகின. இதனை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இர்பானா இக்பால் கூறியதாவது; சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, நாராயணன் சிக்ருபாதாவு பகுதியில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் மிகவும் பலவீனமான நிலையில் கிடந்துள்ளார். நாராயணனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும், அவருக்கு 4ம் கட்டப் புற்றுநோய் இருந்ததாலும் அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாராயணன் இறந்த பிறகு, போலீசார் அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தும், உடலைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முன்வரவில்லை. இதனையடுத்து, உப்பளா பகுதியிலுள்ள ஒரு இந்து பொது மயானத்தில், நாராயணனின் மத நம்பிக்கைகளின்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட இர்பானா, "நெருங்கிய உறவினர்கள் யாரும் வரவில்லை. நாராயணன் அண்ணனின் இறுதிச் சடங்குகளை ஒரு மகளாக நின்று நான் செய்தேன். மதத்திற்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டது மனிதநேயம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement