சேவை ஒதுக்கீட்டில் படித்து பணிக்கு வராத 680 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

5


சென்னை: 'சேவை ஒதுக்கீட்டில் படித்து, முன் அறிவிப்பின்றி, 1,420 டாக்டர்கள் பணிக்கு வராத நிலையில், 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்து உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்கள், சேவை ஒதுக்கீட்டின் கீழ், அரசு மருத்துவ கல்லுாரிகளில், பட்டமேற்படிப்பு படிக்கின்றனர். அவ்வாறு படிப்போர், ஓய்வு பெறும் வரை, அரசு மருத்துவ கல்லுாரிகளில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றாவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், 40 லட்சம் ரூபாய் பிணையத் தொகை, வட்டியுடன் செலுத்த வேண்டும்.

ஆனால், சேவை ஒதுக்கீட்டில் படித்த டாக்டர்களில் பலர் எவ்வித முன்னறிவிப்புமின்றி விடுப்பில் சென்றதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறப்போர் இயக்கத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து, முன் அறிவிப்பின்றி, பணிக்கு வராத டாக்டர்கள் மீதான நடவடிக்கை குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கை:

சேவை ஒதுக்கீட்டில் படித்த டாக்டர்களில் பலர், தன்னிச்சையாக எவ்வித முன் அறிவிப்புமின்றி, பணிக்கு வராமல், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற சென்று விடுகின்றனர். அவர்கள் மீண்டும் பணியில் சேர அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதனை மீறினால், '17 பி' ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பிணையத்தொகையை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுவரை, 1,420 டாக்டர் கள் தன்னிச்சையாக, பணிக்கு வராமல் இருக் கின்றனர். அவர்களில், 680 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 740 பேர் ஒழுங்கு நடவடிக்கையில் உள்ளனர். விதிகளை மீறு வோர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement