வீணாக இருக்க அல்ல வாழ்வு 'காதல் காடு' வீணாவின் வெற்றிப்பயணம்

1

‛குளிர் எழுப்பிச் செல்லும் மயிர்க் கால்களுடன் அதிகாலையில் குயிலின் தேனிசையை ரசிக்கும் மனநிலையை மட்டும் நிலைக்க விடு. அடைமழையென என்மீது நீ தாளம் கொட்டுகின்றபோது ஓர் இசையின் சூட்சுமத்தை அறிகிறேன். நாம் பேச நேரம் கூடாத போதும் தீருவதில்லை எனக்குள் இருக்கும் உன்னுடனான உரையாடல்' என இவர் திடீர் காதல் கவிதை வாசிக்க, காதலர்களின் கைத்தட்டல் விண்ணை பிளந்தது. அந்த கைதட்டலுக்கு சொந்தக்காரர் வீணா.

தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தபடி மாலையில் எப்.எம்.மில் ஆர்.ஜே.வாக இருக்கும் வீணா தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு மனம் திறந்து பேசியதாவது:

பொள்ளாச்சியில் பிறந்து, திருமணமாகி 20 ஆண்டுகளாக கொடைக்கானலில் வசித்து வருகிறேன். கல்வி மீது இருந்த ஆர்வமே என்னை ஆசிரியர் பணிக்குத் தள்ளிச் சென்றது. எனக்கு இரு மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகளாக தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். 8 ஆண்டுகளாக கோடை பண்பலை அறிவிப்பாளராகவும் (ஆர்.ஜே.) உள்ளேன். அரசு விழாக்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. பல்வேறு விளம்பரங்களுக்கு குரல் கொடுத்து வருகிறேன்.

கல்லுாரிகளில் ஆங்கிலம், ஆளுமை மேம்பாடு வகுப்புகளும் நடத்தி வருகிறேன்.

நான் தொகுத்து வழங்கிய “சித்திரச் செவ்வானம்” நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. கொடைக்கானல் கோடை விழா, மலர் கண்காட்சி துவக்க விழாக்களை 6 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுத்து வழங்குகிறேன். சிறந்த அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல்வகை விருதுகளை வாங்கி உள்ளேன்.

இலக்கியம் என் மனதுக்கு நெருக்கமான துறை. என் “காதல் காடு” கவிதை நுால் காதலர்களுக்கு பிரியமானது. காதல் இன்றி எதுவும் இல்லை என்பதை மையமாக வைத்து அதில் கவிதைகள் எழுதியிருப்பேன்.

சிறுவயது முதல் எப்போதும் நாளிதழ், வார இதழ்களை வாசிப்பேன். மனிதனுக்கு எப்படி உணவு முக்கியமோ அதேபோல் வாசிப்பும் முக்கியம். வாசிப்பு திறன் கொண்டவர்களின் வாழ்க்கை வெற்றிப்பாதை நோக்கி செல்லும்.

மாடலிங் துறையில் எனக்கு ஆர்வம் உண்டு. பல்வேறு விளம்பரங்களுக்கு மாடலிங்செய்துள்ளேன். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பது லட்சியம். சாதனை செய்யவும், லட்சியத்தை அடையவும் வயது தடை கிடையாது என நான் உணர்ந்துள்ளேன்.

'டு இன் டைம்' (குறித்த நேரத்தில் முடி) என்பதே நாம் கடைபிடிக்கும் முக்கிய விஷயமாக இருக்க வேண்டும். விரும்பியதை விரைவாக செய் என்பது என்னுடைய பாலிசி.

திருமணமாகி குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தால் அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்பதில்லை. திருமணமான பெண்கள் சாதனைகள் பல செய்ய வேண்டும். அதற்கு குடும்ப உறவுகளின் ஆதரவும் இருக்க வேண்டும்.

மாணவர்கள் மனநிலையை மையமாக கொண்டு கட்டுரை நுால் எழுத ஆயத்த பணிகளை துவங்கிவிட்டேன். அந்நுால் பெற்றோர், ஆசிரியர், மாணவர் விரும்பும் வகையில் இருக்கும். பேச்சாளராகவும், ஆசிரியராகவும், அறிவிப்பாளராகவும், கவிஞராகவும் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதை வாழ்க்கையின் பெருமை என கருதுகிறேன் என்று பேச்சை முடித்தார்.

Advertisement