சத்துணவு மையங்களில் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
மேட்டுப்பாளையம்:சத்துணவு திட்டத்தில் உள்ள, காலியிடங்களை உடனடியாக நிரப்ப, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 1274 இடங்களில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும், அமைப்பாளர், சமையளர், உதவியாளர் என மூன்று நபர்கள் வேலை செய்கின்றனர். இதில், மாவட்டம் முழுவதும் மொத்தமாக, 1371 பணியிடங்கள் காலியாக உள்ளன. இது குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், காரமடை கிளையின் சார்பாக மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்திடம், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பிரகலதா, ஒன்றிய தலைவர் ஆனந்தி ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியர்களிடமே கொடுக்க வேண்டும். பகுதிநேர ஊழியர்களை முழுநேர ஊழியர்களாக ஆக்கி, சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிந்துஜா பொருளாளர் தேவகி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
______