சுமங்கலி நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: சுகாதார சீர்கேடு அபாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுமங்கலி நகரில் சாக்கடை கால்வாய்கள் துார்ந்துபோய் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடப்பதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி முக்கிய விரிவாக்க பகுதியான லஷ்மி நகரில் பல்வேறு புதுக்குடியிருப்புகள் கட்டப்பட்டு வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அப்பகுதியில் புதிதாக திருமண மண்டபம் கட்டப்பட்டிருப்பதால் மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். பெருமாள் கோவில் வழியாக கவரைத் தெருவிற்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள இந்த சுமங்கலி நகரில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு, கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் கால்வாயின் பெரும்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் குளம்போல் தேங்கிக்கிடப்பதால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி அவ்வழியை கடந்து செல்லும் பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதி வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வெளியேற வழியேற்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement