காங்.,கில் இனி கோஷ்டிகள் இருக்காது: மாணிக்கம் தாகூர்

சென்னை: ''தமிழக காங்கிரஸ் கட்சியில் இனி கோஷ்டிகள் இருக்காது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழக காங்., தலைவராக பொறுப்பேற்கும் நிலையில், கோஷ்டி பூசலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

செல்வப்பெருந்தகை, சிதம்பரம், கார்த்தி, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, அழகிரி, செல்லக்குமார், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் என, அனைத்து தரப்பு தலைவர்களையும் தொடர்பு கொண்டு, இன்று பதவியேற்பில் பங்கேற்க வருமாறு அழைத்தேன்.

அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து, அவர்களின் ஆலோசனைகளை கேட்டு, அவர்கள் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்வேன். காங்கிரஸ் கட்சியை சீண்டுகிறவர்களை திருப்பி அடிப்போம்.

எங்கள் கொள்கை எதிரிகளை வீழ்த்த, ஒரே கோஷ்டியாக, ராகுல் கோஷ்டியாக, 'ஒரே தீம், ஒரே டீம்' என்ற அடிப்படையில் செயல்படுவோம்.

'டாஸ்' போடும் கேப்டனாக இருந்து, இளைஞர்களை 'பேட்டிங்' பிடிக்கவும், 'பவுலிங்' போடவும் வைத்து, ஆட்டத்தை ஆட வைப்பேன்.

உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் போன்ற பதவிகளுக்கு, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு த.வெ.க.,விடம் கேட்பீர்கள்?

தேர்தல் தேதி அறிவித்த பின், இட ஒதுக்கீடு குறித்து பேசுவோம்.

தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு, த.வெ.க.,வுடன் இணைந்து எப்படி செயல்படுவீர்கள்?

ராகுல் பிரதமராக தமிழகத்தில் 60 சதவீதம் ஆதரவு இருக்கிறது. மேகதாது அணை, நீட் தேர்வு, நிதி பகிர்வு, இரு மொழி கொள்கை என, தமிழக நலன் சார்ந்த விவகாரங்களில், த.வெ.க., அரசுடன் இணைந்து செயல்படுவோம். மத்தியில் காங்., ஆட்சி அமைய, தமிழக காங்கிரஸ் பாடுபடும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement