பாலாற்றில் தடுப்பணை கட்ட திருப்புத்துார் விவசாயிகள் எதிர்ப்பு
திருப்புத்துார்:பாலாற்றில் மேலுார் பகுதியில் தடுப்பணைக் கட்டுவதற்கு எதிரான போராட்டத்தில் திருப்புத்துார் விவசாயிகளும் பங்கேற்க உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்புத்துார் பகுதியில் பாயும் முக்கிய ஆறுகளில் பாலாறும் ஒன்றாக உள்ளது. நத்தம் கரந்தமலையில் உற்பத்தியாகி திண்டுக்கல்,திருச்சி,மதுரை மாவட்ட கிராமங்கள் வழியாக சிங்கம்புணரி வந்து அங்கிருந்து திருப்புத்துார் பெரிய கண்மாய் வருகிறது.
பின்னர் மணிமுத்தாறு என்ற பெயரில் ராமநாதபுரம் தொண்டியில் கடலில் கலக்கிறது. பல நூற்றாண்டுகளாக திருப்புத்துாரை செழிக்க வைத்துள்ளது. அப்போது முன்னோர்களால் ‛ திருப்புத்துார் ஆறு' என்று அழைக்கப்பட்டிருந்தது.
கடந்த நுாற்றாண்டில் கரந்தமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டதால் மழைப்பொழிவு பாதிக்கப்பட்டு ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. தொடர்ந்து பல தடுப்பணைகளும் கட்டப்பட்டு வருவதாலும், மணல் திருட்டாலும் திருப்புத்துார் பெரியகண்மாய்க்கு நீர்வரத்து கேள்விக்குறியாகி விட்டது.
கடைசியாக பெரியகண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டு 15 ஆண்டுகளாகி விட்டது. இதனால் ஆற்றில் நீர்வரத்து முழுமையாக ஏற்பட்டு கடலில் கலப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனது இதனால் பாலாறு செல்லும் கிராமங்களில் முன்பிருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது இல்லை. இருப்பினும் நீர்வரத்திற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.மாறாக தொடர்ந்து தடுப்பணைகள் கட்டுவதில் பொதுப்பணித்துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆற்றின் கீழ்வடிநிலப்பகுதியில் நீர்வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் போது ஆறு கடலில் கலக்கும் வரை தடுப்பணையில் தேக்காமல் நடவடிக்கை எடுக்க பலமுறை விவசாயிகள் கோரியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது, மேலூர் அருகே பொட்டப்பட்டி,சூரப்பட்டி பகுதியில் தடுப்பணைக் கட்ட பாலாறு சிங்கம்புணரி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். தடுப்பணை கட்டினால் திருப்புத்துார் பகுதியும் பாதிக்கப்படும் என்பதால், தற்போது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க திருப்புத்துார் விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் கூறுகையில்,‛ பாலாற்றில் தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருகிறது. மீண்டும் நீர்வரத்தை மீட்க தடுப்பணைகள் கட்டுவதை நிறுத்த வேண்டும். இதற்காக பாலாறு நீர்வரத்துள்ள 25க்கும் அதிகமான திருப்புத்துார் கண்மாய்களின் பாசனதாரர்கள் சங்கத்தினர் அழைத்து அதற்கான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்த உள்ளோம்.' என்றார்.
மேலும்
-
கிரஷர் இயந்திரத்தில் புடவை சிக்கி பெண் பலி
-
ஏர்போர்ட்டில் ரூ.56 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
-
கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் 1.62 லட்சம் கால்நடைகளுக்கு இலக்கு
-
திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத தெருக்கூத்து
-
பைக்கிலிருந்து தவறி விழுந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு
-
அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய கார்; வம்சாவளி இந்தியர் பலி