ஆதிதிராவிடர் நலக்குழு விழிப்புணர்வு கூட்டம்

 கடலுார்:  ஆதிதிராவிடர் நலக்குழு, மனிதக்கழிவுகளை அகற்றும் தொழில்முனைவோர் தடுப்பு, அவர்களது மறுவாழ்வு, விழிப்புணர்வு  கூட்டம் கடலுாரில் நடந்தது. 

ஜோதிமணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 11 மேல்நிலைப்பள்ளி, 3 உயர்நிலைப்பள்ளி, 13 நடுநிலைப்பள்ளிகள், 99 தொடக்க பள்ளிகள் என 126 பள்ளிகளில் 4,248 மாணவர்கள், 3,884 மாணவிகள் என 8,102 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

5 கல்லுாரி மாணவர்கள் விடுதி, 4 கல்லுாரி மாணவிகள் விடுதி, 2 தொழிற் பயிற்சி மாணவர் விடுதி, 1 தொழிற்பயிற்சி மாணவியர் விடுதி, 29 பள்ளி மாணவர் விடுதி, 19 கல்லுாரி மாணவியர் விடுதி என 60 விடுதிகள் செயல்படுகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்காக தலா 25 ஆயிரம் வீதம் 14 பள்ளிகளுக்கு 5 லட்சத்து 2ஆயிரத்து,740 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அபாயகரமான சாக்கடை மற்றும் மனித கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்ய பணியாளர்களை பணியமர்த்தம் செய்வது சட்டபடி குற்றமாகும். துாய்மை பணியாளர்களுக்கு மறுவாழ்வு செய்ய சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக பகுதி பணியாளர்களுக்கு டார்ச் லைட், கையுறை வழங்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோனை செய்து உதவிகளை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியம், காப்பீடு, வருங்கால வைப்புநிதி, காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற அனைத்து சலுகைகள் கிடைப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Advertisement