ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா? திமுக தலைமை திடீர் ஆலோசனை

66

சென்னை: சிறுபான்மையினர் ஓட்டுகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மாறியுள்ளதால், ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா என, தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

திராவிடர் கழகத்திலிருந்து உருவான தி.மு.க., ஹிந்து மத எதிர்ப்பு அரசியலை பின்பற்றி வருகிறது. அதன் வாயிலாக, சிறுபான்மையினர் ஓட்டுகளை மொத்தமாக அள்ளி வந்தது.

கடந்த 1999 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தபோது, சிறுபான்மையினர் ஓட்டுகளில் ஒரு பகுதியை இழந்தாலும், பெரும் சேதாரத்தை தி.மு.க., சந்திக்கவில்லை.

ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., ஆட்சி அமைத்ததோடு, தமிழக அரசியலே தலைகீழாக மாறியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் வென்ற காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், த.வெ.க., பக்கம் சென்று விட்டன.

கடந்த 60 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்த முஸ்லிம் லீக், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது, அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், 'த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிக்க சொல்லி, முஸ்லிம் சமூகத்திலிருந்து எங்களுக்கு பெரும் அழுத்தம் வந்தது. முதல்வர் விஜய்க்கான முஸ்லிம்களின் ஆதரவு குரல் என் வாழ்நாளில் பார்த்திராதது' என்றார்.

இதனால், சிறுபான்மையினர் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு இனி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், வரும் 2029 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே, இதுகுறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர், முக்கிய நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கிறிஸ்துவர் ஓட்டுகளில் 80 சதவீதம், முஸ்லிம் ஓட்டுகளில் 50 சதவீதத்தை இழந்ததால் தான், இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாத நிலை தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது.

கட்சிக்கு தோல்வி என்பது புதிதல்ல. ஆனால், தி.மு.க.,வின் அடிப்படை ஓட்டு வங்கியான சிறுபான்மையினர், பட்டியலின மக்களின் ஓட்டுகளை இழப்பது, இதுவே முதல்முறை.

சிறுபான்மையினர் தற்போது விஜயை முழுமையாக நம்புகின்றனர். எந்தச் சூழலிலும், தி.மு.க.,வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாத, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், 'த.வெ.க., அரசே சிறுபான்மையினருக்கான அரசு; அதை காப்பாற்ற வேண்டும்' என்கிறார்.

அதேபோல, தி.மு.க.,வுக்கு எதிராக காதர் மொகிதீன் பேசுவார் என்பதை ஸ்டாலின் கனவிலும் நினைக்கவில்லை.

சிறுபான்மையினர் ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு மாறிய நிலையில், ஹிந்து மத எதிர்ப்பு அரசியலை தொடர்வது, அண்ணாமலைக்கு சாதகமாகி விடும். எனவே, ஹிந்து மத எதிர்ப்பு அரசியலை கைவிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல மென்மையான போக்கை கையிலெடுக்கலாமா என்பது குறித்து தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது. இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின், தி.மு.க.,வின் போக்கில் பெரும் மாற்றம் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement