'நீட்' தேர்வு முடிவு வெளியாகும் முன் மருத்துவ விண்ணப்ப பதிவு தொடக்கம்
சென்னை: 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, இணையவழி விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கி உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே 3ம் தேதி நடந்தது. அதில் நடந்த முறைகேடு காரணமாக, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறு தேர்வு கடந்த 21ம் தேதி நடந்தது. சில நாட்களுக்குள், தேர்வு முடிவுகள் வெளியிட, தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு நடந்ததால், நாடு முழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம், நேற்று தொடங்கியது.
அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக இடங்கள், மாநில தனியார் நிகர்நிலை பல்கலையில் உள்ள இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் ஆகியவற்றுக்கு, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டை போல், தேசிய தேர்வு முகமையிடம் இருந்து, மாணவர்களின் மதிப்பெண்கள் பெற்றுக் கொள்ளப்படும்.
'நீட்' தேர்வு முடிவுகள் வெளியான பின், ஒரு வாரம் வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும்.
தற்போது அரசு மருத்துவ கல்லுாரிகளில், 5,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள், கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், 149 எம்.பி.பி.எஸ்., இடங்கள், பி.டி.எஸ்., படிப்பிற்கு, 250 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லுாரிகளின் இடங்களில், இனி கேட்டு பெறப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.