சினிமா கலைஞர்களின் இறுதி அஞ்சலி, சடங்குகள்: அத்துமீறுவோருக்கு தமிழக அரசு மூக்கணாங் கயிறு போடுமா?
கையில் ஒரு கேமிரா, கூட ஓரிரண்டு எடுபிடிகள் இருந்தால் எதை வேண்டுமானாலும் வீடியோ எடுக்கலாம் என்று நினைக்க வேண்டியது. கேமிரா இல்லாவிட்டால், இருக்கவே இருக்கு மொபைல் போன். அதைக் காட்டியபடி, மைக்கை நீட்டியபடி செலிபிரிட்டிகள் எங்கு சென்றாலும் வளைத்து வளைத்து வீடியோ எடுக்க வேண்டியது... அவற்றை தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பரபரப்பாக தலைப்பு வைத்து வெளியிட வேண்டியது. நிறைய வியூஸ், லைக் கிடைத்தால் அதில் காசு பார்க்க வேண்டியது..... இப்படி நிறைய பேர் தமிழகத்தில் அலைகிறார்கள்.
அதிலும் ஏதாவது சினிமா பிரபலம் இறந்துவிட்டால் இவர்களுக்கு கொண்டாட்டம் தான். இறந்த வீடு என்றெல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. இவர்களைப் பொறுத்தவரை அது இவர்கள் ‛‛காசு பார்க்கும்' வீடு. போவோர் வருவோரை எல்லாம் வீடியோ எடுத்து தள்ளி, பேட்டி என்ற பெயரில் மைக்கை நீட்டி நேரம் காலம் தெரியாமல் கருத்து கேட்கிறார்கள்.
சம்மந்தப்பட்டவர்களின் வேதனையும் தனிப்பட்ட வாழ்க்கையும் முக்கியம் என்பதை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை. சமீப காலமாக இந்த போக்கு அபாய கட்டத்தை எட்டி விட்டது.
இவர்களின் இந்த செயல் அஞ்சலி செலுத்த வருபவர்களை, தங்கள் உறவை இழந்து தவிப்பவர்களை அவர்களின் உறவினர்களை அதிருப்தி அடைய செய்கிறது.
இயக்குனர் பாரதிராஜா இறுதி சடங்கில் அத்துமீறியவர்களை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கடுமையாக திட்டினார். அதையும் விவாதம் ஆக்கி சிலர் பணம் பார்த்தனர். இயக்குனர் பாக்யராஜ் இறுதி சடங்கில் 2 நாட்களாக இப்படிப்பட்டவர்களின் தொல்லை அதிகமாக இருந்தது. நடிகைகள் ராதிகா, சுகாசினி உள்ளிட்ட பலர் அவர்களை திட்டித் தீர்த்தனர். பாக்யராஜிற்கு கமல் அஞ்சலி செலுத்த வந்தபோது அவர் காரை விட்டு சிரமப்பட்டு இறங்கும் சூழல் ஏற்பட கோபத்துடன் கேமராக்களை தட்டிவிட்டார். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களை போலீசார் ‛‛நமக்கேன் வம்பு'' என்று கண்டுகொள்வதில்லை. சினிமா சங்கங்களாவது இதில் தலையிடலாம். அவர்களும் கண்டும் காணாமல் சென்று விடுகிறார்கள்.
நடிகை ராதிகா சொன்னது மாதிரி சினிமா விஐபிகள் மரணம் சர்க்கஸ் கூடாரமாக மாறி வருகிறது.
இதற்கு முடிவு கட்ட வேண்டும், கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர். இனி வருங்காலங்களில் இப்படிப்பட்ட வீடியோ கோஷ்டிகளுக்கும் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும். மரணத்தை உரிய மரியாதையுடன் அணுக வேண்டும். அஞ்சலி செலுத்த வருபவர்களை, மரணம் அடைந்தவர்களின் உறவுகளை தவிக்க விடக் கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
தமிழக அரசும் சினிமா சங்கங்களும் இதற்கு முடிவு காணும் வகையில் சங்க கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கூல் சுரேஷ் என்ற நடிகர் பாக்யராஜ் மறைவுக்கு மரியாதை கொடுக்காமல், முருங்கைக் காயுடன் சென்று அஞ்சலி செலுத்தியதும் சர்ச்சை ஆனது. இப்படிப்பட்ட விளம்பர பிரியர்களையும் கட்டுப்படுத்த வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறைந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.
மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது
மும்பை, ஆந்திரா, கேரளா போன்ற இடங்களில் இந்த கூத்துகள் இல்லை. சினிமா விஐபிகள் இறந்தால் அந்த வீட்டுக்குள் மீடியாவுக்கு அனுமதி இல்லை. விஐபிகள், வருகிறவர்கள், போகிறவர்களிடம் பேட்டி எடுப்பது இல்லை. அவர்களை துரத்துவதும் இல்லை.
மறைந்தவர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினருக்கு மீடியாவினர் மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட உணர்வை மதிக்கிறார்கள். சமீபத்தில் பாடகி ஆஷா போஸ்லே மறைந்தபோதும் அப்படிதான் நடந்தது. அந்த நாகரீகம் தமிழகத்திலும் வர வேண்டும்.
"ஒருவரின் சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கு தொடங்கும் இடத்தில் முடிகிறது" என்பது ஜனநாயகம் குறித்து ஆங்கிலத்தில் கூறப்படும் ஒரு விளக்கம். அதாவது ஒருவர் எவ்வளவு தான் கையை வீசினாலும் அது அடுத்தவரின் மூக்கில் படும்போது இந்த இன்னொருவரின் சுதந்திரம் பறிபோகிறது. அதை மீறினால் அது சுதந்திரம் ஆகாது என்பதையே இது குறிக்கிறது. இதை இனியாவது மீடியாக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐயா சாமி நீங்க நல்லா இருக்கனும். இந்த வெகுஜன மக்கள் தங்கள் வேல வெட்டிய பாக்காம, அந்த பிரபலங்களின் (முக்கால்வாசி பேர் சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள) வீட்டுவாசலில், கேமரா, மொபைல் போன் போன்றவற்றை தூக்கிட்டு பழியா இரவு பகல் பாக்காம, தன்மானம் ஒரு துளியும் இல்லாம, வீழ்ந்து கிடப்பதை பாத்தா எரிச்சல் தான் வருது. கொஞ்சம் சுயமரியாதை, சுய கட்டுப்பாடு, அடுத்தவர்களின் சுகமின்மை, சுய ஒழுக்கமின்மை எல்லாம் இவர்களிடம் இல்லாதது தமிழனின் காட்டுமிராண்டித்தனம் வெளிபடுகிறது.
கூத்தாடிகளுக்கு அரசு மரியாதை என்ற கொடுமையும் ஒழிய வேண்டும்.
கேடுகெட்ட ஜென்மங்கள்
அஞ்சலி செலுத்துவோர் கண்ணீர் விடுவார்களா என்று ஆவலுடன் காத்திருந்து அவர்களை ஜூம் செய்து காட்டுவதில் அலாதி பிரியம் இவர்களுக்கு...கேட்டால் TRP என்று வெட்கமில்லாமல் பேசுவார்கள். மொத்தத்தில் இன்றைய பெரும்பாலான ஊடகங்கள் கெட்ட செய்திகளை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பது சோகமான உண்மை.
துக்க நிகழ்வில் பங்கேற்க வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மைக்கை அவர்களிடம் வலுக்கட்டாயமாக திணிப்பது நாகரீகமற்ற செயல்.
பிரதமரின் தாயார் இறுதி அஞ்சலியில் யாரையும் அனுமதிக்கவில்லை . மந்திரிகள் MLA மீடியாக்கள் யாருமே இல்லாமல் நடந்த சுவடே தெரியாமல் நடந்து முடிந்தது .. சினிமா பிரபலங்கள் இறந்தால் டிவிக்களில் இதை தவிர வேறு எதையும் காட்டுவதில்லை
துவக்ககாலத்தில் வாய்ப்புத் தேடி அலையும் போது யார் கேமராவுடன் வந்தாலும் தேடித்தேடி பேட்டி தருவது. நியூஸ், கிசுகிசு போட கவர் மொய் மூலமாக கவனிப்பது. பின்னர் பிரபலமான பின்பு அதே மீடியாவை கண்டபடி திட்டுவது. கேமரா செல்பேசிகளைத் தட்டிவிட்டு விரட்டுவது. இதுதான் நவீன CELEBRITY உலகம் என்கிறார்கள்.
சினிமா போதை மக்களை ஆட்டிப் படைக்கிறது. அதை மீடியா காசு பண்ணுகிறது. மீடியா என்கிற பெயரில் கண்டவனும் இருப்பது தான் வருத்தம். இதை வளர்த்த பெருமை நமது திராவிடத்தையே சேரும். திராவிடம் வளர்த்த எதுவும் நன்றாக இல்லை.
"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு."
பித்துப் பிடித்த திரைப்பிம்ப பைத்தியம்.
திரைப்பட போதையில் உள்ள தமிழர்களுக்கு, திரைப்பட நடிக நடிகையர் ஆட்சி செய்யும் தமிழகத்தில்… இதை தவிர்த்து ஒன்றும் இல்லை.. மூக்கணாங் கயிறா? தூக்கு கயிறில் வேணுமானால் தொங்குவான் ஆனால், சினிமாவை தவிர்த்து ஒன்றும் இல்லை..