இருவேலி கண்மாய்க்குள் ஆட்டோ டிரைவர் உடல்

சாயல்குடி: சாயல்குடி இருவேலி கண்மாய்க்குள் ஆட்டோ டிரைவரின் உடல் மீட்கப்பட்டது. கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.

சாயல்குடி அருகே இருவேலி கண்மாய் சீமைக் கருவேலம் காட்டுப்பகுதியில் கடந்த 2 நாட்களாக ஆட்டோ கேட்பாரற்ற நிலையில் நிற்பதாக ஆட்டோ டிரைவர்கள் சிலருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற ஆட்டோ டிரைவர்கள் சிலர் ஆட்டோவை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் இது யாருடைய ஆட்டோ என பதிவேற்றம் செய்தனர்.

இந்நிலையில் காலையில் அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து சாயல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அழுகிய நிலையில் சடலம் இருந்தது. அதனருகில் மது பாட்டில் இருந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி மகன் சிவகுமார் 26, என தெரிய வந்தது. மலட்டாறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். திருமணமாகாத சிவகுமார் கடந்த சனிக்கிழமை இரவு முதல் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் சாயல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

---

Advertisement