தபால் அலுவலகத்தில் அலுவலர் பற்றாக்குறை: ஸ்பீடு போஸ்ட் அனுப்ப காத்திருக்கும் அவலம்

திருவாடானை: திருவாடானை தபால் அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாததால் ஸ்பீடு போஸ்ட் அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவாடானையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். முக்கியமாக அவசர கடிதங்கள், ஆவணங்களை அனுப்பும் ஸ்பீடு போஸ்ட் சேவைக்கு கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் பல மாதங்களாக இந்த பிரிவில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை.

ஒரு அலுவலர் அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் பணிகள் மந்தமாக நடக்கிறது. இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், மூன்று பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 2 பேர் கூடுதல் பொறுப்பு பணிக்காக வெளியூர் சென்று விட்டனர். ஒரு அலுவலர் மட்டுமே பணியில் உள்ளார். நெட்வொர்க் இணைப்பும் சரியாக கிடைப்பதில்லை என்றனர்.

நெட்வொர்க்கை சரி செய்து இந்த தபால் அலுவலகத்தில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--

Advertisement