பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு; 2027 இறுதிக்குள் முடிவு தெரியும்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

1

புதுடில்லி: 'பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு திட்டம் தொடர்ந்து பரிசோதனையில் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதன் தாக்கம் குறித்து தெளிவான முடிவுகள் கிடைத்துவிடும்' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. திட்டமிட்டதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு அதற்கான இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இதனால், 2030க்குள் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேலும் 10 சதவீதம் அதிகரித்து, 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதே சமயம், வாகனங்களுக்கான மைலேஜ் பாதிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், எத்தனால் வினியோகம் மற்றும் பெட்ரோலில் எத்தனால் கலப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி முன்வைத்த வாதம்:

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது தொடர் சோதனை முயற்சியாகவே நீடிக்கிறது. அதன் இறுதி முடிவுகள் 2027 டிசம்பருக்குள் தெரியவரும். எனினும், 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் எந்த மாற்றமும் இருக்காது.

எத்தனால் கலப்பால் வாகன இன்ஜின்கள் பழுதாகிவிடும் என்பதற்கு இதுவரை எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. எத்தனால் கலப்பு உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எத்தனால் கலப்பு மூலம், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது. 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மையை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement