இயற்கை சாகுபடி  சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்:''விவசாயிகள் இயற்கை வேளாண் சாகுபடிக்கான சான்றிதழ் பெற பதிவு செய்யலாம்'' என மாவட்ட விதை சான்றளிப்பு, உயிர்ம சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் சின்னச்சாமி தெரிவித்து உள்ளார்.

விதை சான்றளிப்பு, உயிர்ம சான்றளிப்புத்துறை சார்பில் இயற்கை வேளாண் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டம், தேசிய உயிர்ம உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்களின் கீழ் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் எக்டேரில் இயற்கை விவசாயம் நடக்கிறது.

இந்நிலையில் 'இயற்கை சாகுபடி விவசாயி' என்பதற்கான சான்றிதழ் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடிக்கான பதிவுக்கு சிறுகுறு விவசாயிகள் ரூ.2700, பெரு விவசாயிகள் ரூ.3700, விவசாய குழுக்கள் ரூ.7800, கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.9000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குநர் சின்னச்சாமி கூறியதாவது:

பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டத்தில் பதிவு செய்ய இயற்கை சாகுபடி விவசாயிகள் 12 ஆவணங்களுடன் குறிப்பாக விண்ணப்பப்படிவம் (படிவம் 1ஏ1), ஓராண்டுக்கான பயிர் திட்டத்திற்கான நகல், துறைரீதியிலான ஒப்பந்த நகல், சமீபத்திய மண், நீர் பரிசோதனை முடிவுகளின் விபரம், பண்ணையின் வரைபடம், பண்ணையின் பொது விபரக்குறிப்பு, நில ஆவணம் சிட்டா, நிரந்தர கணக்கு எண் நகல், ஆதார் கார்டு நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கிக்கணக்கு நகல், தடையில்லா சான்றிதழ், கூட்டுபட்டாவிற்கான ஒரிஜினல் ஆவணம் ஆகியவற்றுடன் விண்ணப்ப கடிதத்தடன் நேரில் விண்ணப்பித்தால் 'அங்கக சாகுபடி விவசாயி' என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

Advertisement