50 மின்மோட்டார் மாயமான புகார் தம்மம்பட்டியில் கணக்கெடுக்க உத்தரவு

ஆத்துார்:கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில், கவுன்சிலர் கூட்டம், கடந்த ஜூன், 1ல் நடந்தது. அப்போது, தி.மு.க., கவுன்சிலர்கள் நடராஜ், கலியவரதராஜ், காங்., கவுன்சிலர்கள் திருச்செல்வன், செல்வி ஆகியோர், '18 வார்டுகளிலும், 92 மின்மோட்டார்கள் உள்ளதாக, பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 50 மின்மோட்டார்கள் மாயமாகி உள்ளன.

இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக, கடந்த, 25ல் செயல் அலுவலர் மோகனரங்கன், அனைத்து கவுன்சிலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
மின்மோட்டார் மாயமானதாக கவுன்சிலர்கள் புகாரில், உண்மைத்தன்மை ஆராயவும், முழுமையாக ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தவும், இளநிலை பொறியாளர் சுகன்யா, உதவியாளர் அருண்மணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆய்வு குழுவினர், காணாமல் போன மின்மோட்டார் எண்ணிக்கை, குதிரைத்திறன்(ெஹச்.பி., அளவு), மதிப்பு, அதற்கு பொறுப்பான பணியாளர் குறித்து அறிக்கை வழங்க வேண்டும். மின்மோட்டார் உள்ளது, பழுது, காணாமல் போனது குறித்து, கவுன்சிலர்களிடம் உறுதி செய்து, அவர்களிடம் அறிக்கை பெற வேண்டும். இக்குழு அளிக்கும் ஆய்வறிக்கைக்கு பின், காணாமல் போன மின்மோட்டார்கள் குறித்து, தம்மம்பட்டி போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து நேற்று முன்தினம் முதல், ஆய்வுக்குழுவினர் பணியை தொடங்கி விசாரித்து வருகின்றனர்.

Advertisement