இடியும் ஆபத்தில் அங்கன்வாடி கட்டடம்: கேள்விக்குறியாகும் குழந்தைகளின் கல்வி

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே சந்தனக்குடில் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் இடியும் நிலையில் இருந்ததால் வாடகை கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு இடவசதி, அடிப்படை வசதி இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி சந்தனக்குடில் கிராமத்தில் 2014- 15ம் நிதியாண்டில் ரூ.24 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர்.இந்நிலையில் மோசமான கட்டுமானம், பராமரிப்பு, சுவர் அரிப்பு, விரிசல் உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அதே பகுதியில் ஓடு வேயப்பட்ட வாடகை கட்டடத்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

தற்போது வாடகை கட்டடமும் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் குழந்தைகள் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கட்டடத்தின் மோசமான நிலை அறிந்து பெற்றோர்களும் அவரவர் பிள்ளைகளை அனுப்ப அச்சப்படும் நிலையில் அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையும் 10-ஆக குறைந்துவிட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் போதுமான இடவசதி இல்லை. சத்துமாவு மூடைகள், பாத்திரங்களை நெருக்கடியான இடத்தில் புழங்குவதால் குழந்தைகள் அமர்ந்து கல்வி பயில வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. கழிப்பறை, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் குறைவால் பெரும்பாலான பிள்ளைகள் அங்கன்வாடிக்கு வருவதை தவிர்க்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' என்றனர்.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை தரப்பில் கூறுகையில், 'புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு வரைவுத் திட்டம் தயாரிக்கும் பணி நடக்கிறது. திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்து உள்ளார். எனவே விரைவில் பணிகள் துவங்கப்படும்' என்றனர்.

Advertisement