முதல்வருக்கு எதிராக அவதுாறு; மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

35


சென்னை: முதல்வருக்கு எதிராக அவதுாறு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரது முன்ஜாமின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சில வாரங்களுக்கு முன் திருச்செந்துாரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் விஜய்யை ஒருமையில் விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, தவெக நகரச் செயலாளர் செல்​வம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அவர் மனுவில், ''ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற முறையில் பேசினேன். அரசியல் உள் நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், ''எனது பேச்சுக்கு அவதூறு வழக்கு தான் தாக்கல் செய்திருக்க வேண்டும், போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாது'' என வாதிட்டார். பிறகு,''7 முறை எம்எல்ஏவாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும்'' என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிறகு ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கூறுகையில், ''1967ம் ஆண்டுக்கு பின் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். எம்எல்ஏவாக இருப்பவர் ஏன் இதுபோல பேச வேண்டும்,'' என்று கேள்வி எழுப்பி, முன்ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.


கைது




இதையடுத்து துாத்துக்குடி மாவட்டம் ஆத்துார் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்தார் என்றும், முதல்வர் விஜய்யை, ஒருமையில் அவதுாறாக பேசியதாகவும், அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவரது கைது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, கைது செய்யப்பட்ட முதல் மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.



ஸ்டாலின் கண்டனம்





திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை; முதல்வரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது 'Take Diversion' அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்!. கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் தவெக எம்எல்ஏ மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தூயசக்தி ஆட்சி, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?

தமிழகம் முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி எம்எல்ஏக்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா? அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?

வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து, விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதல்வர். ஆணவம் அழிவிற்கு வழி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement