'உழைப்பும் மன உறுதியும் இருந்தால் ஜெயிக்கலாம்!'
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழிலில் இறங்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள, திருப்பூர் மாவட்டம் கரடிகோவில் கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண், திவ்யா பாரதி:
நாங்கள் விவசாய குடும்பம். நானும், அக்காவும் நன்கு படித்து, பெரிய கம்பெனியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் அப்பாவின் லட்சியம். பிளஸ் 2 முடித்ததும், கல்லுாரியில் ஆடை வடிவமைப்பு குறித்து பல படிப்புகள் படித்தேன்.
அப்போதே, ஆயத்த ஆடை வியாபாரம் தான் என் இலக்காக இருந்தது. 21 வயதில், 5,000 ரூபாய் முதலீட்டில் தொழில் ஆரம்பித்தேன். 'விவசாயி மகள்' என்று சொல்வதில் எனக்கும், அப்பாவுக்கும் பெருமை. அதனால் என் நிறுவனத்திற்கு, 'உழமகள்' என்று பெயர் வைத்தேன். எங்கள் தோட்டத்தில் இருந்த மோட்டார் பம்ப்செட் அறை தான் என் முதல் கடை.
முதல் சில ஆர்டர்களை நானே தயார் செய்தேன். அடுத்தடுத்து ஆர்டர்கள் வர ஆரம்பித்ததால், விவசாய கூலி வேலைக்கு சென்றிருந்த ஒரு அக்காவுக்கு தையல் சொல்லி கொடுத்து, அவரை பணிக்கு அமர்த்தினேன். இப்போது என் நிறுவனத்தில், 100 பேர் பணிபுரிகின்றனர்; அதில், 80 பேர் பெண்கள்.
'நான் ஒல்லியா இருக்கேன், கருப்பா இருக்கேன், கடைக்கு போனால் என் அளவுக்கு ஆடைகள் இருக்காது' என்று பலரும் கூறுவர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று, ஒல்லியான பெண்களுக்கு ஏற்ற அளவிலான ஆடைகளில் கவனம் செலுத்தினேன்.
அத்துடன், நானே என் நிறுவனத்தின் விளம்பர மாதிரியானேன். என் நிறுவன ஆடைகளை அணிந்து, என்னை நானே மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பெரிதாக ஆர்டர்கள் வரவில்லை; அதன்பின் வர ஆரம்பித்தன.
கிராமத்தில் இருந்து தொழில் செய்வது கஷ்டம். ஆனால், செலவு குறைவு என்பதால் எங்கள் இடத்தில் தொழிலை ஆரம்பித்தேன், ஆர்டர்கள் அதிகமானதால், எங்கள் ஊரிலேயே வேறொரு இடத்தில் தொழிலை விரிவுபடுத்தினேன். தொடர்ந்து, நண்பர் தருண் இந்த தொழிலில் இணைந்தார்; பின் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
தொழில் ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருப்பூர், நாமக்கல் என ஏழு கிளைகள் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளோம். திருப்பூரில் ஆடைகளை தயாரித்து, எங்களது மற்ற கிளைகளுக்கு அனுப்புகிறோம். இன்று கோடிகளில் வர்த்தகம் செய்கிறேன். உழைப்பும், மன உறுதியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.
தொடர்புக்கு: 88388 76104.
***
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது