பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம்; இந்தியா - ஜப்பான் கூட்டறிக்கை

2


புதுடில்லி: எல்லை தாண்டிய பயங்கவரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா - ஜப்பான் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

டில்லியில் நடந்த பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருதரப்பினர் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில்; ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானின் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' என்ற அமைப்பு நடத்திய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல, டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்கிறோம். இந்தக் கொடூரமான தாக்குதல் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் குற்றவாளிகள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் எவ்விதத் தாமதமுமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற ஐநாவால் பட்டியலிடப்பட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் மீது ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதிகளின் புகலிடங்களை வேரோடு அறுக்கவும், பயங்கரவாத நிதி மற்றும் சர்வதேசக் குற்றங்களுக்கு இடையேயான பிணைப்பை உடைக்கவும், பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய நடமாட்டத்தைத் தடுக்கவும், சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement