கோர்ட்டில் நிற்க முடியவில்லை வக்கீல்களுக்கு இருக்கை தேவை ஐகோர்ட் நீதிபதியிடம் மனு

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் பன்னடுக்கு பார்க்கிங் அமைக்க வலியுறுத்தி, வக்கீல் சங்கம் சார்பில்,  ஐகோர்ட் நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை வக்கீல் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ் ஆகியோர், சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகனை சந்தித்து (கோவை மாவட்ட பொறுப்பு நீதிபதி) அளித்துள்ள கோரிக்கை மனு: 

அனைத்து நீதிமன்றங்களையும் ஒரே வளாகத்தில் அமைக்கும் வகையில், கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில்  இடம் ஒதுக்க வேண்டும்.

கோவையில், ஐகோர்ட் புதிய கிளை அமைக்க வேண்டும். 300க்கும் மேற்பட்ட நீதிமன்ற பணியாளர் காலியிடத்தை நிரப்ப வேண்டும். கோர்ட் வளாகத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். 

நீதிமன்றங்களில் வழக்கு ஆவண கட்டுகளை வைப்பதற்கான அடுக்குகள் போதுமானதாக இல்லை. நீதிமன்ற கோப்பு தொகுப்புகளை வக்கீல்களுக்கு ஒதுக்கப்பட்ட பெஞ்சுகள், மேஜை மற்றும் நாற்காலியில் வைக்கப்படுவதால், விசாரணையின் போது வக்கீல்கள் உட்கார இடமின்றி சிரமப்படுகின்றனர்.

பல நீதிமன்றங்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே வக்கீல்கள் நலன் கருதி, போதுமான இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.

அவசர மருத்துவ தேவைக்காக, நீதிமன்ற வளாகத்தில் நிரந்தரமாக ஒரு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement