சாலையை விரைந்து போட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நெட்டப்பாக்கம்: மடுகரையில் தார்சாலை விரைந்து போட வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மடுகரை – புதுச்சேரி சாலை, ரூ. 16 கோடி செலவில் புதுப்பிக்க பூமி பூஜை போடப்பட்டது. அதன்பிறகு தேர்தல் வந்ததால் பணி கிடப்பில் போடப்பட்டது. தேர்தலுக்கு பின் சாலை பணி துவங்கிய நிலையில், மடுகரை – புதுச்சேரி சாலையினை விரைந்து முடிக்க வலியுறுத்தி மடுகரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மடுகரை அம்பேத்கர் சிலை எதிரே நேற்று காலை 10:00 மணியளவில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்த மடுகரை சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement