தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் செடிக்கு தண்ணீர் ஊற்றியவர் விபத்தில் பலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம்: திண்டிவனம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய தொழிலாளி மீது லாரி மோதி இறந்தார்.

திண்டிவனம் அடுத்த அருவாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாரி மகன் கார்த்திக், 25; கூலித்தொழிலாளி. இவர் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில், திண்டிவனம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாஞ்சாலம் கிராமம் அருகே சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றிச் சென்ற லாரி வலது பக்கத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த  கார்த்திக் மீது மோதி, தண்ணீர் டேங்கர் லாரி மீது மோதி  விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் இறந்தார்.

விபத்துக்குள்ளான லாரியை  ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, 52; படுகாயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து காரணமாக திண்டிவனம் – சென்னை சாலையில் 2:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.

விபத்து தொடர்பாக ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement