போர்ச்சுகல் அணியிடம் வீழ்ந்தது குரோஷியா
டொரன்டோ: உலக கோப்பை 'ரவுண்டு-32' போட்டியில், ரொனால்டோ 41 வயதிலும் கோல் அடித்து அசத்த, போர்ச்சுகல் அணி 2-1 என வெற்றி பெற்றது. குரோஷிய அணி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.
மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில், உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பி.எம்.ஒ., பீல்டு மைதானத்தில் நடந்த 'ரவுண்டு-32' போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, லுாகா மாட்ரிச் வழிநடத்தும் குரோஷியாவை எதிர்கொண்டது.
குரோஷியா முன்னிலை: முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட குரோஷிய அணிக்கு 53வது நிமிடத்தில் ஜோசிப் சானிசிச் 'பாஸ்' செய்த பந்தில் இவான் பெரிசிச் ஒரு கோல் அடித்தார். பின், 57வது நிமிடத்தில் குரோஷியாவின் நிகோலா விலாசிச் அடித்த கோல் 'ஆப்சைடு' என மறுக்கப்பட்டது. ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல், 'வார்' தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்யப்பட்டு, 'ஆப்சைடு' என நிராகரிக்கப்பட்டது.
ரொனால்டோ கோல்: பின், 65வது நிமிடத்தில் 'கோல் ஏரியா' பகுதிக்குள் குரோஷியாவின் நிகோலா விலாசிச், போர்ச்சுகலின் ரெனாடோ வெய்காவை கீழே தள்ளிவிட்டார். இதனை 'வார்' தொழில்நுட்பத்தில் உறுதி செய்த நடுவர், போர்ச்சுகல் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு வழங்கினார். இதில் (68வது நிமிடம்) ரொனால்டோ ஒரு கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலை அடைந்தது. பின், 81வது நிமிடத்தில் குரோஷியாவின் பீட்டர் சுசிச் அடித்த கோல், 'வார்' தொழில்நுட்பத்தால் மறுக்கப்பட்டது.
குரோஷியா அதிர்ச்சி: இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+4வது நிமிடம்) ரபேல் லியாவே துாக்கி அடித்த பந்தை போர்ச்சுகலின் ராமோஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். இதற்கு, 90+13வது நிமிடத்தில் பெரிசிச் 'பாஸ்' செய்த பந்தில் ஜோஸ்கோ குவார்டியோல் ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். ஆனால், 'வார்' தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்த நடுவர், 'ஆப்சைடு' என மறுத்தவிட்டார். இதனால் குரோஷிய வீரர்கள் மட்டுமின்றி, மைதானத்தில் இருந்து ஒட்டுமொத்த குரோஷிய ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறியது. இதில் (ஜூலை 6, டல்லாஸ்) ஸ்பெயினை சந்திக்கிறது.
ரசிகர்கள் ரகளை
இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் குரோஷியாவின் பெரிசிச் துாக்கி அடித்த பந்தை சகவீரர் பாசாலிச், ஜோஸ்கோ குவார்டியோலிடம் அனுப்பினார். அதனை குவார்டியோல் கோலாக்கினார். இதனை 'வார்' தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்த போது பாசாலிச்சிடம் பந்து வருவதற்கு முன், குரோஷியாவின் இகோர் மடனோவிச்சின் தலையில் பட்டு சென்றது பந்தில் உள்ள 'சென்சார் சிப்' மூலம் தெரிய வந்தது. அப்போது பாசாலிச் 'ஆப்சைடு' பகுதியில் நின்றதால் கோல் நிராகரிக்கப்பட்டது. இதனை குரோஷிய வீரர்கள் ஏற்க மறுத்தனர். ஆத்திரமடைந்த குரோஷிய ரசிகர்கள், மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டிலை வீசியும், விசில் அடித்து ரகளையில் ஈடுபட்டனர். போட்டி இரண்டரை நிமிடம் பாதிக்கப்பட்டது.
'சீனியர்' வீரர்
போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில் முதல் முறையாக கோல் அடித்தார்.
* உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டியில் கோல் அடித்த மூத்த வீரரானார் ரொனால்டோ (41 ஆண்டு, 147 நாள்).
* இம்முறை 3 கோல் அடித்துள்ள ரொனால்டோ, ஒரு சீசனில் தனது 2வது அதிகபட்ச கோலை பதிவு செய்தார். கடந்த 2018ல் 4 கோல் அடித்திருந்தார்.
* உலக கோப்பை வரலாற்றில், 'பெனால்டி' வாய்ப்பில் அதிக கோல் அடித்த 2வது வீரரானார் ரொனால்டோ (4 கோல்). இங்கிலாந்தின் ஹாரி கேன், 5 முறை இப்படி சாதித்திருந்தார்.
மறைந்த வீரருக்கு சமர்ப்பணம்
குரோஷியாவுக்கு எதிரான வெற்றியை, கடந்த ஆண்டு ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்த சகவீரர் டியோகோ ஜோட்டாவுக்கு சமர்ப்பணம் செய்தார் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போட்டி முடிந்த பின், 21 என்ற எண் இடம் பெற்ற ஜோட்டாவின் 'ஜெர்சி' அணிந்திருந்தார் ரொனால்டோ.
மாட்ரிச் ஏமாற்றம்
குரோஷிய வீரர் லுாகா மாட்ரிச் 40, ஐந்தாவது முறையாக (2006, 2014, 2018, 2022, 2026) உலக கோப்பையில் பங்கேற்றார். இவரது தலைமையிலான குரோஷிய அணி, 2018ல் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்தது. 2022ல் 3வது இடத்தை கைப்பற்றியது. தனது கடைசி உலக கோப்பையில் விளையாடிய இவர், ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
குரோஷியாவுக்காக 202 போட்டிகளில் (29 கோல்) பங்கேற்ற மாட்ரிச், உலக கோப்பை அரங்கில் 23 போட்டியில் (2 கோல்) விளையாடினார்.
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது