'டவுட்' தனபாலு
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: சட்டசபை தேர்தலில் இக்கட்டான சூழலிலும், 47 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. கட்சியில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். உள்ளாட்சி தேர்தல், அடுத்து வரும் பொது தேர்தல்களில், பெண்களுக்கு 50 சதவீதம் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளேன்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள்னு நிறைய ஆண்கள் தான் த.வெ.க.,வில் போய் கூட்டம் கூட்டமா சேர்றாங்க... அடுத்து வர்ற தேர்தல்கள்ல போட்டியிட ஆட்கள் இருக்காது என்பதால், 50 சதவீதம் இடங்களை பெண்களுக்கு தர்றதா வாக்குறுதியை வாரி விடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியிட மாறுதலுக்கு பணம் வாங்கியதாக வி.சி.க., முன்னாள் எம்.எல்.ஏ., பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார். என் மீது குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள், அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் தவறானது. குற்றம் சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். என் துறையை பொறுத்தவரை நான் நேர்மையாகவும், உண்மையாகவும் பணிபுரிந்து வருகிறேன்.
டவுட் தனபாலு: பெரும்பாலான அரசு துறைகளில், இடமாறுதல்கள் வெளிப்படையாக நடக்கின்றன என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம், நீங்க மட்டும் நேர்மையா இருந்தா போதாது... உங்க உத்தரவுகளை செயல்படுத்தும் அதிகாரிகளிடம், 'கை சுத்தம்' இல்லை என்றாலும், உங்களுக்கு தான் கெட்ட பெயர் வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: மேகதாது அணை கட்ட, மரங்களும் வன விலங்குகளும் அடர்ந்து இருக்கும் 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 'இவ்வளவு பெரிய அணையை கட்டினால், பெங்களூரு பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்' என, நிபுணர்கள் கூறுகின்றனர். மேகதாது அணை திட்டம், இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், தமிழகத்திற்கும் எதிரானது.
டவுட் தனபாலு: அது சரி... 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்ல; எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்'னு சிலர் நினைப்பாங்க... அந்த வகையில், பெங்களூர்ல பூகம்பமே வந்தாலும் சரி; தமிழகத்துக்கு மட்டும் தண்ணீர் தரக்கூடாதுன்னு நினைச்சு கர்நாடக அரசு செயல்படுதோ என்ற, 'டவுட்'தான் வருது!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சுவாரஸ்யம்; குப்பைத் தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
-
வணிகவரி சுழற்சிப்படையில் பெண் அலுவலர்கள் அவதி; இணை கமிஷனர்கள் நடவடிக்கை எடுப்பரா
-
சங்கங்கள் கருத்து கேட்டு அரசு காப்பீட்டு திட்டத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: ஓய்வூதியர்கள் போர்க்கொடி
-
'தமிழகத்தில் ரூ.22 ஆயிரம் கோடி சுற்றுலா முதலீடுகள் என்னாச்சு'
-
ஹிந்து முன்னணி செயலர் நுால் பட்டறைக்கு தீ வைப்பு
-
ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது