300 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி; தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிஷாவில் கைது

புவனேஸ்வர்: நாடு முழுதும், 300 சொகுசு ஹோட்டல்களில் தங்கியிருந்து பணம் செலுத்தாமல் ஏமாற்றி 36 ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த, 69 வயது நபர் ஒடிஷாவில் கைது செய்யப்பட்டார்.

வழிகாட்டி தமிழகத்தைச் சேர்ந்தவர் பிங்சன் ஜான். இவர், நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

தன்னை ஒரு சுற்றுலா வழிகாட்டியாகவும், ஆங்கில பேராசிரியராகவும், யோகா பயிற்சியாளராகவும் அவர் அறிமுகம் செய்து கொண்டார். சில நாட்கள் தங்கி சொகுசாக வாழ்ந்த பின், கட்டணம் எதுவும் செலுத்தாமல் ஹோட்டலில் இருந்து தப்புவதை ஜான் வாடிக்கையாக வைத்திருந்தார்.

சில சமயம், ஹோட்டல்களில் உள்ள பொருட்களை திருடியும் சென்றுள்ளார்.

கடந்த மாதம், சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள, 'ஹயாத்' ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய ஜான், 63,755 ரூபாய் அறை வாடகை தராமல் வழக் க ம்போல் அங்கிருந்து கம்பி நீட்டினார்.

மோசடி மேலும், ஹோட்டலில் இருந்து வாடகைக்கு பெற்ற, 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'லேப் டாப்'பையும் அவர் எடுத்துச் சென்றார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒடிஷாவின் புவனேஸ்வரில் தங்கியிருந்த ஜானை கைது செய்தனர்.

விசாரணையில், 36 ஆண்டுகளாக நாடு முழுதும் உள்ள 300க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களில் இது போல் தங்கியிருந்து அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பல முக்கிய பெருநகரங்கள் உட்பட, 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 1970களில், சொகுசு ஹோட்டல்களில் தங்கும் சுற்றுலா பயணியரை குறிவைத்து, 20க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த சார்லஸ் சோப்ராஜை பின்பற்றி, மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக பிங்சன் ஜான் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Advertisement