அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

சென்னை: வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை - 'பிளாக்கர்ஸ்' சாலை சந்திப்பில் 'யு - டர்ன்' வழியாக சென்று வந்தன.

இந்நிலையில் இந்த யு- - டர்ன் பகுதியும், 'டேம்ஸ்' சாலைக்கு செல்லும் வழியும், இரும்புத் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.

இதனால், வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சாலைக்கு வரும் வாகனங்கள், எல்.ஐ.சி., அருகே யு- - டர்ன் செய்து, மீண்டும் அண்ணா சாலை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், கூடுதலாக 2 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலை குறைப்பதாக கூறி, கூடுதல் துாரம் செல்ல வைப்பது, சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

எரிப்பொருள் உயர்ந்து வரும் நிலையில், 2 கி.மீ., சுற்றிச்செல்வது, ஏழை, நடுத்தர வாகன ஓட்டிகளின் குடும்ப பட்ஜெட் பாதிக்கும் நிலை உள்ளது.

எந்த முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து மாற்றம் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

போக்குவரத்து மாற்றத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரு வழிப்பாதையாக இருந்த அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், நேற்று முதல் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் எல்.ஐ.சி., பகுதியில் மட்டுமே 'யு - டர்ன்' செய்ய முடிகிறது.

Advertisement