பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள்; உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

2


சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட், இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பட்ஜெட் விவாதம் முடிந்ததும், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இதற்காக, துறை வாரியாக, முதல்வர் விஜய் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். காலை மற்றும் பிற்பகல் என, இரண்டு வேளைகளாக, இந்த ஆய்வு கூட்டங்கள் நடந்து வருகின்றன.

இதுவரை, கூட்டுறவு, உணவு, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ச்சியாக, 22ம் தேதி வரை ஆய்வு கூட்டங்களில், முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு குறுகிய கால அவகாசமே உள்ளது. எனவே, ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் துறை செயலர்கள், அடுத்த இரண்டு நாட்களில், புதிய திட்டங்கள் குறித்த அறிக்கையை தயாரித்து, நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement