வெளியே தலைகாட்ட மறந்த 'மாஜி'க்கள் கடும் விரக்தியில் அதிமுக - திமுக

6


- நமது நிருபர் -




தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டு வரலாற்றில் முக்கிய கட்சிகளாக இருப்பவை திமுக - அதிமுக இந்த கட்சிகளில் அவ்வளவு எளிதில் யாரும் பதவியை பெற முடியாது.

குறிப்பாக மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் பதவிக்கு நீண்ட நாள் உழைப்பு வேண்டும். பதவியை பெற கட்சி நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற வரலாறு இருக்க வேண்டும்.

இது மட்டும் போதாது அத்தந்த மாவட்டத்தில் அதிகாரத்தில பலமுடன் இருப்பவர்களிடம் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் அல்லது விசுவாசமாக இருப்பது போல் நடிக்க வேண்டும்.

இதன் பிறகு கட்சி தலைமைக்கும் நன்கு அறிமுகமாகி, அவர்களிடமும் நல்ல பெயர் பெற்று ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் பதவியும் பெற வேண்டும். கட்சி தலைமைக்கு திருப்தி ஏற்பட்டால் சேர்மன், எம்எல்ஏ அமைச்சர் என பதவிகள் கிடைக்கும்.

இதற்காக திமுக - அதிமுகவில் பதவியில் இருந்தவர்களும், பதவியை எதிர்பார்த்தும் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்களின் எதிர்கால கனவை 2026 சட்டசபை தேர்தல் சுக்குநுாறாக உடைத்து போட்டு விட்டது.

தேர்தலை எதிர்பார்த்து இந்த இரண்டு கட்சியும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பே பொது கூட்டங்களில் நலத்திட்ட உதவி என்கிற பெயரில் பெண்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வாரி வழங்கினர்.

பொதுக்கூட்டங்களுக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு 200 ரூபாய் கொடுத்தனர். தேர்தலுக்கு சில மாதம் முன்பு நலத்திட்டங்களை வாரி வழங்கினர்.

இத்தனைக்கு பிறகும் திமுகவினருக்கு மக்களிடம் வரவேற்பின்றி தோல்வியை தழுவினர். இந்த தோல்வி திமுகவினரை மனதளவில் பாதித்துள்ளது. முன்பு போல முன்னாள் எம்எல்ஏ க்கள் பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டுவது குறைந்துள்ளது. பொது மக்கள் பிரச்னையில் வலிய சென்று தலையிட்டு தங்களின் இருப்பை காட்டியவர்கள் எது நடந்தாலும் நடக்கட்டும் நமக்கென்ன என கண்டும் காணாமல் போகின்றனர்.

தோல்வி என்பது வரும் போகும் ஆனால் கட்சியின் கட்டமைப்பு குலையாமல் இருக்க வேண்டும். அதிமுகவில் இந்த தேர்தல் தோல்வி கட்டமைப்பை சிதைத்து விட்டது. பதவியில் இருப்பவர்களும், இருந்தவர்களும், முன்னாள் எம்எல்ஏ க்களும் த.வெ.க.,வின் வாசலில் பல மணிநேரம் காத்திருந்து இணைந்து வருகின்றனர்.

கட்சி மாறினாலும், கட்சியில் நீடித்தாலும் மீண்டும் தங்களின் பதவிக்கான மரியாதை கிடைக்குமா? மக்களிடம் அங்கிகாரம் பெற முடியுமா என்ற கேள்வி இவர்களிடம் எழுந்துள்ளது.

இந்த அசாதாரணமான சூழ்நிலை.பிரதான கட்சிகளாக இருந்த திமுக - அதிமுக நிர்வாகிகளிடம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement