மானாமதுரையில் வீடுகளில் தொடர் திருட்டு: குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
மானாமதுரை:மானாமதுரையில் சில மாதங்களாக ஓய்ந்திருந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாண்டி மற்றும் பரமசிவம் ஆகியோர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் பூட்டி இருந்த வீடுகளின் பூட்டை காரில் வந்த நபர்கள் உடைத்து 17 பவுன் தங்க நகை, பல லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1.32 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
இதற்கு முன்பாக மானாமதுரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மிளகனூர் புதுக்குளம் அரசு மதுக்கடையில் வசூலான தொகையை இரவு 10:30 மணி அளவில் டூவீலரில் கொண்டு சென்ற அக்கடையின் மேற்பார்வையாளர் செல்வராஜை இரண்டு டூவீலர்களில் வந்த 4 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு அவரிடமிருந்த ரூபாய் 82 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் மீண்டும் தலை துாக்கியுள்ள நிலையில் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட மானாமதுரை,சிப்காட்,திருப்பாச்சேத்தி, பழையனூர்,திருப்புவனம், பூவந்தி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாததும், பல இடங்களில் பணியிடங்கள் காலியாக இருப்பதும், குறிப்பாக குற்றப்பிரிவில் போலீசாரே இல்லாமல் இருப்பதும் திருட்டு மற்றும் கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மானாமதுரை சப் டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் சார்பில் 2 வருடங்களுக்கு முன்பு பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பெரும்பாலானவை தற்போது செயல்படாமல் உள்ளதால் குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காண்பதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் போலீசார் ரோந்து பணியை முற்றிலுமாக செய்யாததாலும் திருட்டு,கொலை,கொள்ளை போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆகவே போலீஸ் எஸ்.பி., சிவ பிரசாத்,
மானாமதுரை சப்டிவிஷனுக்கு உட்பட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் காலியாக உள்ள போலீசார் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், குற்றப்பிரிவை வலுப்படுத்தவும், செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக சீரமைத்து இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
ரூ.3 கோடி மதிப்பு கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
-
சேதமடைந்த சாலையால் முகுந்தகிரி மக்கள் அவதி
-
விளையாட்டு// மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை அணியினர் சாம்பியன்
-
தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
-
செய்திகள் சில வரிகளில்...
-
பெருங்களத்துாரில் மதுக்கடையை மூட இரவில் பகுதிமக்கள் சாலை மறியல் கத்தியுடன் ‘குடி’மகன்கள் திரிவதால் அச்சம்