பெருங்களத்துாரில் மதுக்கடையை மூட இரவில் பகுதிமக்கள் சாலை மறியல்: கத்தியுடன் 'குடி'மகன்கள் திரிவதால் அச்சம்

பெருங்களத்துார்: மது போதையில் கத்தியுடன் திரியும் 'குடி'மகன்களால் பீதியடையும் பகுதிமக்கள், பெருங்களத்துாரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி, ஜூலை 5 இரவில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாம்பரம் - முடிச்சூர் சாலை, பழைய பெருங்களத்துார் பகுதியில், 'டாஸ்மாக்' கடை உள்ளது. இதை ஒட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிறுத்தம், குடியிருப்புகள் ஆகியவை உள்ளன.

இங்கு வரும் 'குடி'மகன்கள், போதை தலைக்கேறியதும், சாலை நடைபாதையில் படுத்து அலங்கோலமாக உறங்குவது, அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இக்கடையில் மது அருந்திய சிலர், அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு நுழைந்தனர்.

அவர்களை துரத்திக்கொண்டு மற்றொரு கும்பல் கத்தியுடன் புகுந்தது. இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் வராததால் ஆத்திரமடைந்த பகுதிமக்கள், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் இரவில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன்பின் வந்த போலீசார், சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

வேளச்சேரியில் எதிர்ப்பு திருவான்மியூரில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடையை, வேளச்சேரி, ராம் நகரில் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் கடந்தாண்டு முயற்சி செய்தது. இதற்கு பகுதி மக்கள், அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், எதிர்ப்பையும் மீறி, அதே டாஸ்மாக் கடையை நேற்று திறக்க அதிகாரிகள் தயாராகினர். பகுதி மக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சட்டம் -- ஒழுங்கு பிரச்னை சூழல் ஏற்பட்டதால், போலீசார் அறிவுறுத்தலின்படி, கடையை திறக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

Advertisement