ஓரிவயலில் குடிநீர் வசதியின்றி 500 குடும்பங்கள் தவிப்பு

ராமநாதபுரம்:கடலாடி தாலுகா ஓரிவயல் கிராமத்தில் குடிநீர் வசதியின்றி 500 குடும்பத்தினர் சிரமப்படுவதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

* குடிநீர் வசதியின்றி அவதி: கடலாடி தாலுகா ஓரிவயல் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனுஅளித்தனர். இதில் ஓரிவயல் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அனைவரும் பொதுகிணற்றில் குடிநீர் எடுக்கிறோம். அதுவும் மாசடைந்துள்ளதால் சிரமப்படுகிறோம். எனவே குடிநீர் வசதி செய்துதர கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

* பட்டா வழங்க கோரிக்கை: கடலாடி கிழக்கு தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ராமசாமி தலைமையில் மக்கள் மனுஅளித்தனர். வாலிநோக்கம் குரூப் சாத்தார்கோவில் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 30 குடும்பங்கள் வசிக்கின்றனர். எந்ததொரு அடிப்படை வசதியின்றி வாழும் ஏழை மீனவ குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தினர்.

* பாதுகாப்பு வழங்க கோரிக்கை: ராமநாதபுரம் ரோமன் சர்ச் பஸ் ஸ்டாப் அருகே ஆட்டோ தொழில் செய்யும் வாழவந்தா காந்தாரி அம்மன் ஆட்டோ சங்கத்தினர் மனு அளித்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் உருவாக்கி 17 பேர் ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறோம். அருகே உள்ள ஆட்டோ சங்கத்தை சிலர் தொழில் செய்யவிடாமல் மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தொடர்ந்து அதே இடத்தில் ஆட்டோ தொழில் செய்ய பாதுகாப்பு வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.----

Advertisement