மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இனி எந்த கட்டுமானத்திற்கும் அனுமதியில்லை: பட்டா காடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் திட்டம்

கம்பம்: தமிழகத்தில் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இனி எந்தவித புதிய கட்டுமானங்களுக்கும் அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பட்டா காடுகள் வைத்திருப்பவர்களுக்கும் படிப்படியாக உரிய நஷ்ட ஈடு வழங்கி வெளியேற்றவும் திட்டமிட்டுள்ளது.

மேகமலை புலிகள் காப்பகம் 2021 ல் துவக்கப்பட்டது. தமிழகத்தில் சத்தியமங்கலம், ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, மேகமலை என 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் 306 புலிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை கேரளா பெரியாறு புலிகள் காப்பகத்தை இணைக்கிறது. இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி முழுவதும் புலிகள் காப்பகமாக மாறி உச்சபட்ச பாதுகாப்பு வளையத்திற்குள் வனப்பகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை சரிவிலிருந்து மீட்க முடியும்.

புலிகள் காப்பகங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதையும், அனுமதி பெறாமல் ரிசார்ட்டுக்கள் செயல்படுவதையும் சுட்டி க்காட்டி பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் மட்ட குழு ( Empower Committee ) ஒன்றை நியமித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி கடந்தாண்டு ஆய்வு செய்த குழு தன் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ரிசார்ட்டுக்களை மூடி சீல் வைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை பின்பற்றி சில நாட்களுக்கு முன் மேகமலை, மணலாறு பகுதிகளில் இயங்கிய 10 ரிசார்ட்டுக்களை வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.

படிப்படியாக வெளியேற்றம்



இதுதொடர்பாக புலிகள் காப்பக அதிகாரிகள் கூறிய தாவது: புலிகள் காப்பக பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ரிசார்ட்டுக்களை உச்சநீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். அந்த கட்டடங்களின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மேகமலை பகுதியில் இனி எந்தவித புதிய கட்டுமானங்களுக்கும் அனுமதி கிடையாது. பட்டா காடுகள் வைத்திருப்பவர்களிடமும் பேசி படிப்படியாக உரிய நஷ்ட ஈடு வழங்கி வெளியேற்ற திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன் ஏகன் ஜகா பகுதியில் பட்டா காடுகள் வைத்திருந்தவரிடம் பேசி 30 ஏக்கர் நிலத்தை ரூ. 2 கோடி வழங்கி வனத்துறை பெற்றது என்றனர்.

Advertisement