பழநி முருகன் கோயில் சேவைகளுக்கு அலைபேசி செயலி வழி முன்பதிவு
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் சேவைகளுக்கு பக்தர்கள் அலைபேசி செயலி, க்யூ.ஆர்., கோடு மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கட்டண வரிசைகளில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.
இதை தவிர்க்க ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்கள் சேவைகளை எளிதில் பெற கோயில் இணையதளம் https://palanimurugan.hrce.tn.gov.in/ பயன்படுத்தலாம். இத்துடன் க்யூ.ஆர்.கோடு, திருக்கோயில் அலைபேசி செயலி வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்து சேவைகளை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியுள்ள சேவைகள் விவரம்:
தரிசன கட்டணம் ரூ.100, தரிசன கட்டணம் ரூ.10, தரிசன கட்டணம் (விசேஷ நாட்களில்) ரூ.200, தரிசன கட்டணம் (விசேஷ நாட்களில்) ரூ.10, தங்க ரதம் ரூ.2000, தங்கமயில் வாகனம் ரூ.2000, தங்கத்தொட்டில் ரூ.300, அர்ச்சனை ரூ.5, காதுகுத்து கட்டணம் ரூ.50, புது கணக்கு ரூ.200, பால் அபிஷேகம் ரூ.25, பஞ்சாமிர்த அபிஷேகம் ரூ.25, அனைத்து அபிஷேகங்கள் ரூ.75, விளா பூஜை கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.900, விசேஷ நாட்களில் ரூ.1800, சிறுகால சந்தி பூஜை கட்டளை சாதாரண நாட்களில் ரூ.900 விசேஷ நாட்களில் ரூ.1800, கால சந்தி பூஜை கட்டளை சாதாரண நாட்களில் ரூ.900 விசேஷ நாட்களில் ரூ.1800, உச்சிகால பூஜை கட்டளை சாதாரண நாட்களில் ரூ.900 விசேஷ நாட்களில் ரூ.1800, சாயரட்சை பூஜை கட்டளை சாதாரண நாட்களில் ரூ.900, ராக்கால பூஜை கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.900 விசேஷ நாட்களில் ரூ.1800, வின்ச் (இருவழி பயணத்திற்கு) ரூ.100, ரோப்கார் (இருவழி பயணத்திற்கு) ரூ.100, பஞ்சாமிர்த பிரசாதம் முன்பதிவு ரூ.140 (இதில் 50 கிராம் பெட்ஜார் பஞ்சாமிர்தம், பழநி முருகன் ராஜஅலங்கார படம், விபூதி பிரசாதம், விரைவு தபால் கட்டணம்)
கோயில் ஆன்லைன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பக்தர்கள் பயன்படுத்தி தரிசனத்திற்குரிய முன்னேற்பாடுகளை முன்பதிவு செய்வதற்கான ஆவணம், அடையாள அட்டைகளுடன் வந்து தரிசனம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.