மூணாறில் நிலச்சரிவு அபாயம்: பயணிகள் வருவதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

மூணாறு: மூணாறில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு வருவதை தவிர்க்குமாறு சற்றுலா பயணிகளுக்கு இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட் வேண்டுகோள் விடுத்தார்.

மூணாறில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. பழைய மூணாறில் சி.எஸ்.ஐ., சர்ச் அருகே ரோடு பணிக்காக மண் எடுக்கப்பட்ட பகுதியில் ஜூலை 4ல் விரிசல் ஏற்பட்டது. இதனால் சர்ச், குடியிருப்புகளிலும் விரிசல் ஏற்பட்டது. அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அப்பகுதியில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் மூணாறில் இருந்து பழைய மூணாறு செல்லும் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அதிகாரிகள் நேற்று விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். ஜூலை 4ல் ஏற்பட்ட விரிசலை விட தற்போது விரிசல் அதிகரித்து நிலம் தாழ்ந்து வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி விரிசல் ஏற்பட்ட பகுதியில் உள்ள 8 மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இங்குள்ள கட்டடங்கள் இடியும் பட்சத்தில் மண், கற்கள் முதிரைபுழை ஆற்றில் குவிய வாய்ப்புள்ளது. நிலச்சரிவு ஏற்படும் பட்சத்தில் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டு மூணாறுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மூணாறு வருவதை தவிர்க்குமாறு இடுக்கி கலெக்டர் தினேசன் செருவாட் வேண்டுகோள் விடுத்தார். கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்குமாறு உத்தரவிட்டார்.

Advertisement