நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர்' பணியிடம்... 1,800 காலி!குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகள் பாதிப்பு

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில், 1,800 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 'பம்ப் ஆப்பரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், குடிநீர் வினியோகம் மற்றும் தொட்டி பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமலேயே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப, 10,000 லிட்டர் முதல் அதிகபட்சமாக 2 லட்சம் வரை, 4,200 மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குடிநீர் தொட்டிகளுக்கு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால், முறையான பராமரிப்பு இன்றி, 1,250 குடிநீர் தொட்டிகள் மிகவும் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

இதில், ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு, 5 ஆப்பரேட்டர்கள் முதல் 10 ஆப்பரேட்டர்கள் வரை நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக, 5,500 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆனால், மாவட்டம் முழுதும், 1,800 பம்ப் ஆப்பரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றுதல், குடிநீர் வினியோகம், நீர்த்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்தல் மற்றும் குளோரின் மருந்து கலந்து பாதுகாப்பான குடிநீரை வினியோகம் மற்றும் மோட்டார் பழுதுகள் உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த காலி பணியிடங்களை கூடுதலாக கவனிக்கும் பம்ப் ஆப்பரேட்டர், பெயரளவிற்கு பணிகளை செய்வதால், பல ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீர் ஏற்றவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பல ஊராட்சிகளில் குடிநீர் வீணாகி வருவதோடு, வினியோகமும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக, பல ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யாமல், குடிநீர் வழங்கப்படுவதால் பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன், வயலுார் ஊராட்சி உட்பட பல பகுதிகளில், கலங்கலான மற்றும் பூச்சி கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில், 'ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 2019 முதல் 2025 வரை, 1,050 மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

இன்று வரை, இந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, காலியாக உள்ள பம்ப் ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்பி, மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாவட்டத்தில், காலியாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் ஆப்பரேட்டர்கள் குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு விபரம் அளித்துள்ளோம். அரசு உத்தரவுக்கு பின் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

@block_B@ சிரமப்பட்டு வருகிறோம் இதுகுறித்து, வயலுாரைச் சேர்ந்த பம்ப் ஆப்பரேட்டர் ஒருவர் கூறியதாவது: ஒரு பம்ப் ஆப்பரேட்டர், கூடுதலாக மூன்று முதல் ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கவனித்து வருகிறார். அவருக்கு, சம்பளத்துடன் கூடுதலாக ஒரு மேல்நிலை தொட்டிக்கு, 250 ரூபாயை அரசு வழங்கி வந்தது. ஆனால், அந்த பணமும், கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒருவரே, மூன்று முதல் ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கவனித்து வருவதால், கடும் சிரமப்பட்டு வருகிறோம். காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, பலமுறை அரசுக்கு தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு, விடிவு எப்போது பிறக்கும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement