ஐரோப்பாவில் சுழன்றடிக்கும் காட்டுத்தீ :30 ஆயிரம் ஏக்கர் மரங்கள் கருகின

லிஸ்பன்:கோடைக்கால வெப்ப அலை மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக, தெற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயில் சிக்கித் தவித்து வருகின்றன.

வரலாறு காணாத வகையில் ஐரோப்பிய நாடுகளை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்ப அலையில் சிக்கி நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காட்டுத்தீயும் ஆங்காங்கே பற்றி எரிவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

போர்ச்சுகலின் உசெலொ பகுதியில் கடந்த 2ம் தேதி தொடங்கிய காட்டுத்தீ, கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தீயின் வீரியத்தைக் குறைக்க, 15 தீயணைப்பு வாகனங்களுடன் சென்ற 1,200 தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

காட்டுத்தீயில் இதுவரை 30,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் கருகி சாம்பலாகியுள்ளது. தீயின் தீவிரம் எல்லையைத் தாண்டியதால், போர்ச்சுகலுக்கு உதவ அண்டை நாடான ஸ்பெயின், இத்தாலி நாடுகள் முன்வந்துள்ளன.

இதுதவிர கிரீஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான தெசலோனிகி அருகே ஒரு பெரிய பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் கடந்த 4ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்றால் தீ மளமளவென பரவியதை அடுத்து, வானை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்தது.

நச்சுப் புகை நகரம் முழுவதும் பரவியதை அடுத்து, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், கதவு மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைக்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சாலையோரம் நின்றிருந்த வாகனம் ஒன்றில் இருந்து ஏற்பட்ட பொறி, அங்கிருந்த காய்ந்த புற்களில் பற்றிக் கொண்டதுதான் இதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement