பெண்களின் நிரந்தர சொத்து கல்வி மட்டுமே: பரிசளிப்பு விழாவில் நீதிபதி அபூர்வா பேச்சு
கூடலுார்:'பெண்களின் நிரந்தரமான சொத்து கல்வி மட்டுமே,' என முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் பழனி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அபூர்வா பேசினார்.
கருநாக்கமுத்தன்பட்டி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பரிசு வழங்கும் விழா ஆசிரியர் சரவணன் தலைமையில், தலைமை ஆசிரியர் முனியசாமி முன்னிலையில் நடந்தது. செயலாளர் ஆசிரியர் முருகன் வரவேற்றார்.
மாணவர்களுக்கு பரிசு வழங்கி பழனி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அபூர்வா பேசியதாவது:
பெண்கள் வாழ்க்கையின் நீண்ட கால இலக்காக கல்வி இருக்க வேண்டும். மிகப்பெரிய சொத்துக்கள் உங்கள் கையை விட்டுப் போனாலும் கற்ற கல்விதான் சொத்து. அது உங்களை காப்பாற்றும். எனது 23ம் வயதில் நீதிபதியாக உயர்ந்திருக்கிறேன் என்றால் காரணம் கல்விதான். பெற்றோரிடம் கல்வி உரிமையை கேட்டு பெற்று படித்தே ஆக வேண்டும். எந்த வேலைக்கு சென்றாலும் உங்களுடைய பள்ளி ஆசிரியர்களை மறக்காதீர்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்றார். பொருளாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.