நீராறில் இருந்து கேரளாவுக்கு வழங்கும் தண்ணீரை நிறுத்துங்க! ஆழியாறு பாசன விவசாயிகள் வலியுறுத்தல்

ஆனைமலை: 'நீராறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடும் நடைமுறை நிறுத்த வேண்டும்,' என ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு இன்னும் தீவிரமடையாத நிலையில், பாசனத்துக்கு தடையின்றி நீர் கிடைக்குமா என விவசாயிகளிடம் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாய நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம், தென்சங்கம்பாளையம் மண்டபத்தில் நடந்தது. தலைவர் சுதாகர், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். திட்டக்குழு தலைவர் செந்தில், பாசன சபை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பாசன விவசாயிகள் இடையே தற்போது பரவலாக பேசப்பட்டு வரும், குழாய் வழி பாசனம் பற்றி விவசாயிகளிடம் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில், ஆழியாறு பாசன பகுதிக்கு இந்த குழாய் வழி பாசனம் தேவையில்லை. கால்வாய் பாசனமே போதுமானது என தீர்மானிக்கப்பட்டது.

திருமூர்த்தி பாசன பகுதிக்கு பாசன காலமான, 135 நாட்களை தாண்டியும் காலவரையின்றி நீர் செல்கிறது. இதனால் வரும் நீராண்டில் பி.ஏ.பி., திட்டத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, இனி வரும் ஆண்டுகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட பாசன காலத்துக்குள் பாசனத்தை நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

அரசால் தேர்வு செய்யப்பட்ட பாசன சபைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், உடனடியாக கிளை கால்வாய் துார்வாருதல் மற்றும் பராமரிப்பு நிதியை பாசன சபைகளுக்கு வழங்க வேண்டும். இதனால், பணிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

தமிழக - கேரளா மாநில ஒப்பந்தப்படி இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்படும் வரை அக்., 1ம் தேதியில் இருந்து ஜன., 31ம் தேதி வரை நீராறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கேரளாவில் இடைமலையாறு அணை கட்டி முடித்து பல ஆண்டுகளான பின்பும், இன்னும் கேரளாவுக்கு நீர் திறந்து விடும் இந்த நடைமுறை தொடர்கிறது.

இந்தாண்டு பருவமழை மிக குறைவாக உள்ளதால், குடிநீர் முதல் பாசனம் வரை அனைத்துக்கும் நீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே, ஒப்பந்தப்படி இந்தாண்டு முதல், நீராறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறந்து விடும் நடைமுறையை நிறுத்தி வேண்டும். அக்கால கட்டத்தில் வரும் நீரை, பி.ஏ.பி., திட்ட அணைகளுக்கு திருப்ப வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement