'கடின உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றியின் ரகசியம்!'

உலகின் உயரமான எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்துள்ள, சென்னையைச் சேர்ந்த, 16 வயதாகும் நிஷா சசிகுமார்:

எனக்கு, 14 வயதிலேயே மலையேற்றம் செல்ல ஆசை. அப்பா சிறு சிறு மலையேற்ற பயணங்களுக்கு செல்வதை பார்த்து, எனக்கும் ஆசை வந்தது. அதுகுறித்து நிறைய படிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் உலகில் உள்ள ஏழு கண்டங்களின் உயரமான சிகரங்களை ஏறும், 'செவன் சம்மிட்ஸ்' சவால் குறித்து தெரிந்தது. அதை படித்ததும், நாமும் ஏன் மலையேற்றம் செல்லக்கூடாது என்ற எண்ணம் வந்தது.

பெற்றோரும் தடை சொல்லாமல் ஆதரவளித்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, 'ஜிம்' பயிற்சி, நீண்ட துார ஓட்டம், சைக்கிள் பயிற்சி என அனைத்தும் கற்றுக் கொண்டேன். மலையேற்றத்துக்காக, பெங்களூரில் நடத்தப்படும் பாறை ஏறும் பயிற்சிக்கு சென்றேன். 2024ம் ஆண்டு டிசம்பரில், கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள, 'கிளிமஞ்சாரோ' மலை ஏறியது தான், என் முதல் மலையேற்ற அனுபவம்.

என் ஆசைக்கும் ஆர்வத்துக்கும் மலையேற்றம் என்றால், வாழ்க்கைக்கு முக்கியமானது படிப்பு. அதனால், இரண்டையும் விடாமல் தொடர்ந்தேன். பள்ளி நேரத்தில் படிப்பு மட்டும் தான். அதன்பின், 'ஆன்லைன்' வகுப்புகளில் படிக்க ஆரம்பித்தேன்.

இடையில் மலையேற்றத்திற்கு பயிற்சிகளை எடுத்து கொண்டதுடன், மனதளவிலும் அதற்காக தயாரானேன். எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு அப்பாவும் என்னுடன் வந்தார். ஆனால், மருத்துவ அவசர நிலையால், அவர் பாதியில் வெளியேற வேண்டியதாகி விட்டது.

அதன்பின், நான் மட்டும் மலையேற்ற குழுவினருடன் சென்றேன். பயிற்சி ஏற்றத்தின் போது, தொடை பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. அக்காயங்களுடன் தான் மலையேறினேன்.

என் குழுவில், 28 வீரர்கள் இருந்தனர். அவர்கள் எனக்கு நிறைய உதவிகள் செய்தனர். என் வெற்றியில் அவர்களின் பங்கும் முக்கியமானது. எவரெஸ்ட் உச்சிக்கு செல்ல செல்ல, 8,000 மீட்டருக்கு மேல் இறந்த பல வீரர்களின் உடல்களை பார்த்தபோது, அதிர்ச்சியுடன் கூடிய பயம் ஏற்பட்டது; ஆனாலும், நம்பிக்கையுடன் மலையேறி எவரெஸ்ட் உச்சியை அடைந்தேன்.

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே என் வெற்றியின் ரகசியம்!

Advertisement