காப்பீடு, நிதியுதவி எதிர்பார்க்கும் வெல்லம் தயாரிப்பு தொழிலாளர்கள்
தேனி:வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள் காப்பீடு, நிதியுதவி வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
மாவட்டத்தில் சின்னமனுார், பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் பெரும் பகுதி பொங்கல் அறுவடைக்கும், சுமார் 300 முதல் 500 ஏக்கர் பயிரிடப்படும் கரும்பு வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. 1 ஏக்கர் பயிரிடப்பட்ட கரும்புகளில் இருந்து 5 முதல் 8 கொப்பரை அளவுக்கு கரும்பு பால் கிடைக்கும். அவற்றை 200 டிகிரி வெப்பத்தில் 1.30 மணி நேரம் காய்ச்சி சரியான பதம் கிடைத்தவுடன் வேறு கொப்பரைக்கு மாற்றி வெல்லமாக மாற்றி விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. பெரியகுளம் லட்சுமிபுரம் கோம்பை பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி நடந்தது.
கருப்பசாமி, பணியாளர்,கோம்பை: உடுமலைப்பேட்டையில் இருந்து குடும்பத்துடன் வந்து வெல்லம் தயாரிக்கும் பணி செய்கிறோம். தேனி மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு மேல் தங்கி வேலை செய்கிறோம். சொந்த ஊருக்கு ஆண்டுக்கு 2 முறை மட்டும் செல்வோம். அரசு சார்பில் எங்களுக்கு எந்த தொழில் சார்ந்த பலன்களும் கிடைக்கவில்லை. வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து நிதியுதவி செய்தால் உதவியாக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
தமிழரசி, கோம்பை: ஒரு கொப்பரை கரும்பு பாலை காய்ச்சினால் 40 கிலோ வெல்லம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 5 கொப்பரை காயச்ச முடியும். அரசு சார்பில் நல வாரியம், காப்பீடு திட்டம் ஏற்படுத்தினால் உதவியாக இருக்கும் என்றார்.