சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த நொச்சலுார் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் சங்கர், 21; இவர், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகினார். இவ்வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வினோதா உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.